புதுடில்லி : சீன ராணுவம். லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டில் படைகளை குவித்துள்ளது.இதையடுத்து இந்தியாவும் ராணுவத்தினரை நிறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் நேற்று இந்தியா - சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் கூட்டு செயல் திட்டக் குழுவின 17வது ஆலோசனை கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது.
இதில் இந்திய வெளியுறவு துறை இணை செயலர் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் துறை டைரக்டர் ஜெனரல் தலைமையிலான குழுவினர்பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்கவும் இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்களின் அடுத்த கட்ட பேச்சு துவக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5ம் தேதி இந்தியா - சீனா சிறப்பு பிரதிநிதிகள் தொலைபேசியில் உரையாடியபோது இரு நாட்டு படைகளையும் விலக்குவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது.அதை முன்னெடுத்துச் செல்வது என தற்போதைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியா - சீனா பரஸ்பர உறவில் சமூகமான சூழலை உருவாக்க எல்லையில் படைகளை விலக்குவது அவசியம் என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.கூட்டத்தில் எல்லையில் தற்போதைய நிலவரம் படைகள் வாபஸ் பெற்று வருவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.எல்லையில் படைகளை விலக்கி பதற்றத்தை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய இரு நாடுகளின் மூத்த கமாண்டர்கள் விரைவில் மீண்டும் சந்தித்து பேசவும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.