1969-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் Tranquillity base என்ற இடத்தில் தரையிறங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 முறை நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது நாசா. இந்த பயணத்தின்போது, நாசா விண்வெளி வீரர்கள் மூன்று கோல்ஃப் பந்துகள், சில புகைப்படங்கள், சில ஆய்வு கருவிகள், ஒரு சிறிய சிலை, அமெரிக்க தேசிய கொடி மற்றும் மனித கழிவுகள் அடங்கிய பைகளை நிலவில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இதுபோன்ற கழிவுகளை மற்றொரு கோளில் விட்டுவிட்டு வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்த நாசா, இது அந்த கோளின் தன்மையை பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளது. உதாரணத்திற்கு இந்த பொருட்களோடு , பூமியில் இருக்கும் நுண் உயிர்கள் நிலவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்த பகுதியை ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் அந்த நுண் உயிர் மாதிரிகள், நிலவில் உருவானவை என்று தவறாக கணிக்க வாய்ப்புள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க நாசா புதிய கொள்கையை வகுத்துள்ளது.
அந்தவகையில், நிலவின் மேல்பரப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உறைந்த நிலையில் அதிக அளவு நீர் இருப்பதாக கருதப்படும் துருவப்பகுதிகள் சிறப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிக்கு விண்கலத்தையோ மனிதனையோ அனுப்பும்பட்சத்தில் பூமியில் உள்ள நுண் உயிர்கள் அங்கு பரவிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நாசா அறிவித்துள்ளது. அதன்படி, பூமி சார்ந்த எந்த பொருட்களையும் அங்கு விட்டு வரக் கூடாது. அதேநேரம், நிலவின் பிறகு பகுதிகளை ஆராய்வதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.