மாணவர்களுக்கு ஒழுக்கம் பத்தி வெறும் ஏட்டுக்கல்வியாகச் சொல்லித்தருவதைவிட, அவர்களுக்கு விவசாயத்தைக் கத்துக்கொடுத்தாலே போதும். தானாக ஒழுக்கச் சீலர்களாக மாறிவிடுவார்கள்.
தனது பள்ளியில் படிக்கும் 45 மாணவர்களுக்கு ஆடிப்பட்டத்தில் விதை விதைப்பதின் அவசியத்தை உணர்த்தியதோடு, அந்த மாணவர்களுக்கு 13 வகையான காய்கறி விதைகளை வழங்கி, அவர்களை இயற்கை விவசாயி ஆக்கும் முன்னெடுப்பையும் செய்துள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரின் முயற்சிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.
சீதா மரத்துக்கு முன்பு மாணவிகள்
நா.ராஜமுருகன்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, அய்யம்பாளையம். இந்தக் கிராமம் வறட்சிமிகுந்த கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 53 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குமாரவேல் என்பவர் பணியாற்றி வருகிறார்.
விதை விதைக்கும் மாணவர்கள்
நா.ராஜமுருகன்
பொட்டல்காடாக வறண்டு கிடந்த இந்தப் பள்ளி வளாகத்தில், மாணவர்களைக் கொண்டு 160 மரக்கன்றுகளை நடவைத்து, அவற்றை மரமாக்கியிருக்கிறார். அதோடு, இங்கு காய்கறித் தோட்டத்தை மாணவர்களைக்கொண்டு போடவைத்து, அவற்றை இயற்கை முறையில் பராமரித்து வந்தார்.
அந்தத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளைக் கொண்டுதான், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்தக் காய்கறித் தோட்டத்தில் காய்கறிகள் காய்க்கும் சீஸன் முடிந்ததால், அந்தக் காய்கறித் தோட்டம் அழிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவல், அதைத்தொடர்ந்த தொடர் ஊரடங்கால், மாணவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல்.
மாணவர்களோடு குமாரவேல்
நா.ராஜமுருகன்
இந்த நிலையில்தான், 45 மாணவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம மக்கள் எனப் பலரையும் அழைத்து, ஆடிப்பட்டத்தில் 13 வகையான காய்கறி விதைகளை விதைக்கும், விழாவை இனிதே நடத்தி முடித்திருக்கிறார். அதோடு 45 மாணவர்களுக்கும் 13 வகையான காய்கறி விதைகளை வழங்கி, அவரவர் வீடுகளில் அதை விதைக்கச் சொல்லி, மாணவர்களை இயற்கை விவசாயிகளாக மாற்றும் முயற்சியைச் செய்திருக்கிறார்.
இது, விவசாயம் சார்ந்த ஊர். அதனால், என்னிடம் படிக்கும் மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கும் முயற்சியை செய்ய நினைத்தேன். மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றி வெறும் ஏட்டுக்கல்வியாகச் சொல்லித் தருவதைவிட, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுத்தாலே போதும். தானாக ஒழுக்கச் சீலர்களாக மாறிவிடுவார்கள். ஏனென்றால், மாடுகளுக்கு இணையாகக் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தும் விவசாயிகளிடம் கள்ளம் கபடம் இருக்காது, சூதுவாது இருக்காது, அடுத்தவர்களை ஏமாற்றும் நயவஞ்சகம் இருக்காது என்பது எனக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கை.
குமாரவேல் (தலைமை ஆசிரியர்)
நா.ராஜமுருகன்
அதனால், மாணவர்களுக்கு நான் கல்வி அறிவுக்கு இணையாக விவசாயம் சார்ந்த அறிவையும் தொடர்ந்து போதித்து வருகிறேன். இப்போது, தகுந்த சமூக இடைவெளி, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தேன். 45 மாணவர்களை வைத்து, பள்ளி வளாகம் முழுக்க காய்கறி விதைகளை விதைக்க வைத்தேன்.
அதற்கு முன்பாக, ஆடிப்பட்டத்தின் அவசியம், அதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு ஒரு விளக்கவுரை கொடுத்தேன். அதன்பிறகு, ஆர்வமாக அவர்கள் காய்கறி விதைகளை விதைத்தார்கள். அதோடு, அவர்களை இயற்கை விவசாயி ஆக்கும் நோக்கில், அங்கே வந்திருந்த 45 மாணவர்களுக்கும் 13 வகையான காய்கறி விதைகளை வழங்கியிருக்கிறேன். அவர்கள் அதைத் தங்கள் வீடுகளில் விதைத்து, இயற்கை முறையில் வெள்ளாமை பண்ண வேண்டும் என்று டாஸ்க் கொடுத்துள்ளேன். யார் சிறந்த முறையில் காய்கறிகளை விளைவித்து எடுக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்த பரிசை தர இருக்கிறேன்.
மாணவருக்கு விதை கொடுக்கும்போது...
நா.ராஜமுருகன்
இந்த முயற்சிக்கு எனக்கு ஸ்கூல் அசிஸ்டென்ட் மதுசூதனன் பெரிதும் ஒத்தாசை பண்ணுகிறார். லாக்டவுனில் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடந்து, உள்ளூரப் புழுங்கிபோயிருக்கிறார்கள். அவர்கள் மனரீதியான பிரச்னைகளுக்கும் ஆளாக நேர வாய்ப்பிருக்கிறது. அதனால், காய்கறித் தோட்டம், பசுமை, வெள்ளாமை என்று அவர்களை கொஞ்சம் மடைமாற்றினால், காய்கறித் தோட்டம் போலவே அவர்களின் மனதும் மகிழ்ச்சியால் பூத்துக்குலுங்கும். அதற்காகதான், இந்த முயற்சி" என்றார் மகிழ்ச்சியாக!