உடலின் மூட்டுகளில் வலிகள் ஏற்படாத யாரையும் காண்பது அரிது. மூட்டுகளில் வலி ஏற்பட மிகப் பொதுவான காரணம் காயமடைதலாகும். எனினும், இது தவிர்ந்த பல்வேறு நோய்கள் மூட்டு வலிகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஒருவருடைய வயது, பருவங்களுக்கேற்ப மூட்டு வலியை ஏற்படுத்தும் வெவ்வேறு நோய்கள் முன்னிலை பெறுகின்றன.
உதாரணமாக, பிள்ளைப் பருவத்தில் Juvenile Chronic Arthritis, Still’s Disease Rheumatic Fever போன்றவையும் இளம் பராயத்தில் ரூமன்றொயிட் ஆத்ரைட்டிஸ் (Rheumatic Arthritis), கவுட் (Gout), Systemic Lupus Erethematosis (SLE), Ankylosing Spondylitis, Genocidal Arthritis, Reiter’s Syndrome போன்ற நிலைமைகளும் முதுமைப் பருவத்தில் ஒஸ்ரியோ ஆத்ரைட்டிஸ் (Osteo Arthritis) ரூமன்றொயிட் ஆத்ரைட்டிஸ் (Rheumatic Arthritis) போன்ற நோய்களும் முன்னிலை பெறுகின்றன.
இவை தவிர, வைரஸ் நோய்களுக்குப் பின்னரான மூட்டு வலி (Post Viral Arthritis), குடல் நோய்களுடன் நேர்ந்த மூட்டு வாதம் (Enteropathic Arthritis) என்பன வயது வேறுபாடின்றி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முடக்கு வாதம் - அதாவது, ரூமன்றொயிட் ஆத்ரைட்டிஸ் முக்கியமானது. ஏனென்றால், இளம் பராயத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கினாலும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் முதுமைக் கால வாழ்க்கையை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி விடுகின்றன.
எமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தி பிறள்வாகி வேலை செய்வதனால் மூட்டுகளிலுள்ள மென் சவ்வுக்கு எதிரான செயலிகளை (Anti Body) உருவாக்குகின்றது. இவை மூட்டு மென் சவ்வுகளைப் பாதித்து அழற்சியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இந்நோயின் குணங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டால், கை, கால் விரல்களின் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படத் தொடங்கும். இந்த வலி காலை வேளையில் அதிகமாகக் காணப்படுவதோடு காலை நேரத்தில் விரல் மூட்டுகளை அசைக்க முடியாதளவு இறுக்கமாகவும் காணப்படும். விரல் மூட்டுகளின் வலி காரணமாக கைகளின் பலமும் செயற்றிறனும் குறைந்து செல்கிறது.
பெரிய மூட்டுகள் என்று சொல்கின்ற தோள், இடுப்பு, முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, காரைக்கால் போன்ற எல்லா மூட்டுகளிலும் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படலாம். பெரிய மூட்டுகளில் இதன் தாக்கம் ஏற்படும்போது மூட்டைச் சுற்றியுள்ள தசைநார்கள் (Tendinitis) அழற்சிக்கு உள்ளாகலாம். அதுபோன்று மூட்டைச் சுற்றியுள்ள சும்மாடுகளும் (Bursitis) அழற்சிக்கு உள்ளாகலாம்.
நீண்ட காலமாக மூட்டுகளில் அழற்சி காணப்படும்போது மூட்டு மென்சவ்வு மற்றும் மூட்டு கரியிழையம் சிதைவடைகின்றன. அத்துடன், மூட்டைச் சுற்றியுள்ள தசைநார்களும் பலவீனமடைகின்றன. இது மூட்டில் ஏற்படும் வலியை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, மூட்டின் ஸ்திரத்தன்மையும் குறைந்து, காலப்போக்கில் மூட்டின் சாதாரண ஒழுங்கமைப்பு பாதிக்கப்பட்டு விகாரமடைகிறது.
மூட்டு வாத நோயில் உருவாகும் எதிர் செயலிகள் (Anti Body) மூட்டு மென்சவ்வை பாதிப்பதுபோல் இதையொத்த ஏனைய மென்சவ்வுகளையும் பாதிக்கிறது. அதன் காரணமாக நுரையீரல், நுரையீரல் உறை (Pleura), இதயம், இதய உறை (Pericanlum) என்பனவும் பாதிக்கப்படுகின்றன.
வயது அதிகரிக்கும்போது மூட்டுகளிலுள்ள கசியிழையம் தேய்வடைந்து மூட்டு மென்சவ்வுக்குள்ளே இருக்கும் திரவம் காய்ந்து போவதால் மூட்டுகளில் வலி உருவாகிறது. இது முடக்குவாதம் அல்லது ஒஸ்ரியோ ஆத்ரைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதன் தாக்கம் பொதுவாக முழங்கால் மூட்டுகளில் ஏற்படத் தொடங்கும். ஏனென்றால், முழங்கால் மூட்டுகள் உடலின் பாரத்தைத் தாங்குவதோடு அசைவு கூடிய பகுதியுமாகும். இந்த முடக்குவாதம் உடம்பில் எல்லா மூட்டுகளையும் பாதிக்கும். கை, கால்களிலுள்ள சிறிய மூட்டுகள் முதல் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு என எல்லா மூட்டுகளையும் பாதிக்கும். குறிப்பாக, முள்ளந்தண்டு மூட்டுகளையும் பாதிக்கச் செய்கிறது.
உடல் பாரம் கூடியவர்களுக்கு முழங்கால் மூட்டுகள் இலகுவாக தேய்வடையும். அதுபோன்று பாரம் தூக்கும் தொழிலாளர்கள், அதிகமாக படிகளில் ஏறி இறங்குபவர்கள், நிற்கின்ற அல்லது தொடர்ந்து நிற்கவேண்டிய தொழிலாளர்கள் போன்றவர்களின் மூட்டுகள் இலகுவில் தேய்மானத்துக்குள்ளாகின்றன. அதனாலேயே வயது வித்தியாசமின்றி இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைகின்றன.
இதற்கு முக்கிய காரணம், உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களாகும்.
மாதவிடாய் சக்கரம் நின்ற பின்னர் ஈஸ்ரோஜன் ஹோர்மோன் குறைவடைவதால், வயதான காலங்களில் எலும்புகள் மென்மையடைவது போன்றவற்றால் ஒஸ்ரியோ ஆத்ரைட்டிஸ் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. சமநிலை உணவுகள் தவிர்த்தல் அல்லது எடுக்க முடியாமையும் இதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
பாதிக்கப்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி, உடல் அசையும்போது ஏற்படும் வலி, மூட்டு வீக்கம், மூட்டுகளின் உருவமைப்பு மாறுபடுதல் போன்றவற்றாலும் கை விரல் மூட்டுகளில் ஏற்படும் வலி காரணமாக கைகளின் பலம் குறைவதோடு செயற்றிறனும் குறைவடைகின்றது.
குறிப்பாக, மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை முற்றாக இல்லாதொழிக்க முடியாது. குறித்த ஒரு நிலைமைக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அதன் இயங்கு நிலையை தக்கவைத்துக்கொள்ள மூட்டுகள், முக்கியமாக முழங்கால், இடுப்பு என்பன மாற்றவேண்டி ஏற்படலாம்.
எமது நாட்டில் காணப்படுவது மூட்டு வாத காய்ச்சலாகும். இது பக்றீரியாவால் ஏற்படும் தொண்டை அழற்சி அல்லது தோல் அழற்சியின் பின்னர் எமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தி பிழையாக வேலை செய்வதால் உருவாகும் சுய எதிர்ச்செயலிகள் உடலில் பல்வேறு பகுதிகளையும் தாக்குகின்றன. முக்கியமாக மூட்டு மென்சவ்வு தாக்குதலுக்கு இலக்காகின்றது. இதன்போது ஏற்படும் மூட்டு வலி ஒரு மூட்டிலிருந்து இன்னொரு மூட்டுக்குத் தாவும் தன்மையுடையது.
பிள்ளைப் பராயத்தில் சில வகை மூட்டு நோய்கள் காணப்படுகின்றன. அவற்றுள் Stills Disease பொதுவாகக் காணப்படுகிறது. Stills Disease இல் பெரிய மூட்டுகள் (முழங்கால், முழங்கை, மணிக்கட்டு) போன்ற இடங்களில் கடுமையான வலி ஏற்படுகின்றது. அத்துடன், மண்ணீரல் அழற்சி, குருதிக் கலங்களின் எண்ணிக்கை மாற்றங்கள் அழற்சி சுட்டிகள் போன்றவை மிகவும் உயர்ந்து காணப்படுகின்றன.
ஒருவருக்கு ஒருமுறை மூட்டுவாதக் காய்ச்சல் ஏற்பட்டால் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான மருந்துகளை உரிய நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைரஸ் நோய்த் தாக்கத்தால் ஏற்படும் ஆத்ரைட்டிஸ் வலி (Viral Arthritis) என்பது பெரும்பாலும் தானாக அடங்கிவிடும்.