பதின்ம வயது பிரச்சினைகளை முதலில் நினைவுபடுத்திக்கொள்வோம். முதலாவது - சகஜமாக, தோழமையாக அளாவிக்கொண்டிருந்த உங்கள் மகனோ, மகளோ திடீரென்று உங்களை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கி தனிமையை விரும்புவது அவர்களுக்கு ஏதோவொரு பிரச்சினை உள்ளது என்பதை உங்களுக்கு அறிவிக்கும் முதல் எச்சரிக்கை. இந்தத் தனிமை தேடும் பழக்கங்கள், பரிமானங்கள், உறவில் நட்பில் விளையாட்டுகளில் காணப்படும்.
இந்தப் பழக்கத்தை நீங்கள் கவனித்தால், அவர்களோடு நீங்கள் நெருக்கமாகப் பழகவேண்டும். மனந்திறந்து அளவளாவி அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிய வேண்டும். நேரடியாக, ‘‘உனக்கு என்ன பிரச்சினை? ஏன் இப்படி அறைக்குள் அடைந்து கிடக்கின்றாய்?’’ - என்ற மாதிரியான விசாரணைகளைத் தவிர்க்க வேண்டும். உங்களை ஒரு நண்பராக - மனம் விட்டுப் பேசக்கூடிய ஒருவராக அவர்கள் எண்ணவேண்டுமே ஒழிய, ஒரு ‘பொலிஸ்காரனாக’ எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் பழகும் விதத்தை அவர்கள் நீங்கள் இரகசியமாக ‘ஒற்று’ பார்ப்பதாக எண்ணிவிடாமல் கவனத்துடன் பழக வேண்டும். அவர்கள் தங்களின் தனிமை பழக்கத்துக்கு சொல்லும் காரணங்களை விமர்சிக்காமல் - கண்டிக்காமல் - அதற்கு மாற்றுக் கருத்துகளைச் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் உள்ளக்கிடக்கைகளை உண்மையாக உங்களால் புரிந்துகொள்ளமுடியும். அதன் பின்னர் மெல்ல மெல்ல உங்களை அவர்கள் நம்பத் துணிவார்கள். உங்களை தமது ‘உற்ற நண்பர் ஒருவர்’ போல் ஏற்றுக்கொள்வார்கள். அதன் பின்னர் நீங்கள் சொல்லும் அறிவுரைகளை காது கொடுத்துக் கேட்பார்கள்.
அவர்களது தனிமையைப் போக்க உங்கள் நாளாந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களில் உங்கள் ஈடுபாடுகளைக் காட்டுங்கள். இது ஒரு செயற்கைத் தளமாகத் தோன்றுவதைத் தவிருங்கள். உண்மையில், நீங்கள் தங்களில் அன்பு, ஆதரவு, நம்பிக்கை உள்ளவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்களது தனிமை ஈடுபாட்டைத் தவிர்க்க சுற்றுப்பயணங்கள், கலை நிகழ்ச்சிகள், அவர்கள் ஈடுபாடுள்ள விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்குகள் என்பவற்றில் உண்மையாகவே நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.
அவர்கள் மனதில் உங்கள் ஈடுபாடு ஒரு போலித்தனமானதாக இருக்கக் கூடாது. ‘இந்தப் பருவக் கோளாறும் நிரந்தரமானதல்ல. இதுவும் கடந்துபோகும்’ என்ற மனநிலை உங்களுக்கு ஏற்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இப்போதே கவனமெடுக்காமல் விட்டால் பின்னர் துன்பப்படப் போவது பெற்றோர் மாத்திரமேதான் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
அடுத்து, இந்தப் பதின்ம வயதினர் காட்டும் எச்சரிக்கை, அவர்களின் உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் - இவை பற்றி கடந்த வாரம் கூறப்பட்டிருந்தது.
அவர்கள் எடுத்துக்கொள்கின்ற உணவின் அளவு, உணவு வகைகள், உணவைத் தவிர்த்தல் போன்ற விடயங்களில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் உளப் பிரச்சினையுள்ள பதின்ம வயதினர் சிலர் அளவுக்கதிகமாக உணவை உண்பதுண்டு. இப்பழக்கம் அவர்களின் எடையை அதிகரிக்கும். OBESIT என்ற உடற்பருமன் நோய்க்கு அவர்கள் ஆளாவார்கள். இன்னும் சிலர் உணவைத் தவிர்க்கும் பழக்கம், உணவை நேரகாலத்தில் எடுக்காமல் நாளுக்கு ஒரு தடவை அல்லது அகால நேரத்தில் சாப்பிடுவது அல்லது தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு பட்டினி கிடப்பது போன்ற பழக்கங்கள் உங்கள் குழந்தைகள் தங்கள் மனதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் ஏற்படும் வெறுப்பை அல்லது இயலாமையை இந்தப் பழக்கவழக்கங்களாக வெளிக்காட்டுவதைக் குறிக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனை நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் அன்பால், அரவணைப்பால் அமைதியாகக் கலந்துபேசி காரணத்தை அறிய வேண்டும். இந்த உணவுப் பிரச்சினைகள் ANOREXIA NERVOSA என்ற பசியற்ற உளநோய், BULIMIA என்ற பேரூண் வேட்கை என்ற கருத்துள்ள ‘தீராப் பசி’ உளநோய் என்பவை பதின்ம வயதினரிடையே உருவாகும் மனநோய்களுக்கு வழிவகுக்கும். இவற்றைக் குணப்படுத்த மருத்துவ உதவி அவசியம்.
சுய புறக்கணிப்பு என்கின்ற SELF NEGLEC பழக்கம் பதின்ம வயதினரிடையே காணப்பட்டால், முன் கூறியதைப்போல் போதைவஸ்து, மதுபாவனை பழக்கங்களோடு இது தொடர்பானதோ அல்லது பதின்ம வயது பிரச்சினைகளால் ஏற்பட்ட குணங்குறிகளா என்பதை அவர்களோடு அன்பாகப் பேசி அறிந்து உதவி தேடும் உள்ளங்கள் என்ற புரிந்துணர்வோடு நீங்கள் அறிந்து அவர்களின் உளக்கிடக்கை புரிந்து உதவ வேண்டும்.
சுய தீங்கு SELF HAMM என்ற தமக்குத் தாமே தீங்கிழைக்கும் செயற்பாடு மருத்துவ உதவி மூலமாகத்தான் குணப்படுத்தக் கூடியது. மனநிலை மருத்துவர், உளவள ஆலோசகர், உளவள ஆலோசனை (COUNSELLING) போன்ற மருத்துவ உதவிகள் இங்கு கட்டாயம் அவசியமானவை.
பதின்ம வயதினரிடையே காணப்படும் தம்மைத் தாமே குறைவாக எடை போடும் குணம் (LOW SELF ESTEEM) குணமடைவதற்கு பெற்றோர், ஆசிரியர் என்போரின் கூட்டு வழிகாட்டுதல் அவசியம். வாழ்வை வளம்பெற துணைபோகும் SELF HELP நூல்கள், பெற்றோர் வாசித்தறிவது - எப்படி இந்த உளப்பிரச்சினைகளைத் தீர்க்க - உங்களால் உதவ முடியும் கருத்துகளை உங்களுக்குப் போதிக்கும்.
ஒன்று மட்டும் நினைவுகூருங்கள். இந்தப் பதின்ம வயது பிரச்சினைகளுக்குப் பெற்றோராகிய நாமும் கல்வி போதிக்கும் ஆசிரிய சமூகமும் ஒருவிதத்தில் காரணமாகின்றோம்.
குறிப்பாக சொல்வதானால், இந்தப் பதின்ம வயதினர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்வதில்லை. உதாரணமாகத், தொடர்ந்து முழுநாளும் தொலைபேசி, தொலைக்காட்சி என்று வாழ்வை ‘தொலைத்து’ விடும் பழக்கவழக்கங்களுக்கு நாம் அடிமையாக இருந்துகொண்டு பதின்ம சமுதாயம் அவற்றைப் பின்பற்றும்போது ‘எந்த முகத்தோடு’ அவர்களுக்கு இவற்றைத் தவிர்க்க ஆலோசனை, அறிவுரை கூறமுடியும்? நாம் சொல்லும் ஆலோசனை அறிவுரைகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்குபோல்’ வீணாகிவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள். நீங்கள் ஓர் உதாரண மனிதராக உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால்தான் உங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பார்கள். உங்கள் எண்ணங்களும் உங்கள் நடத்தைகளும் தான் உங்கள் குழந்தைகளை உருவாக்கின்றன.
‘பெற்றோர் எவ்வழி அவர்தம் பிள்ளைகள் அவ்வழி’
இறுதியாக பெற்றோராகிய நீங்கள் இந்த இரண்டும் கெட்டான் பராய பதின்ம வயதினர் உதவி என்று ஓடிவரும் வேளையில் ஆதரவு என்று ஏங்கி நிற்கும் பருவத்தில் அன்பு என்று எதிர்பார்க்கும் காலத்தில் அம்மாவாக, அப்பாவாக நன்நடத்தைப் பெற்றோராக எந்த நேரமும் அவர்களுக்கு உதவ, அணைக்க, ஆதரவளிக்க ‘தயாராக’ இருங்கள்.
கண்டிப்பு அவசியமென்றாலும் அந்தக் கண்டிப்பில் அன்பு மிளிரட்டும். ஆதரவு தெரியட்டும். நம்பகத்தன்மை இருக்கட்டும். உங்கள் சொந்த உணர்வுகள், உணர்ச்சிகள், கருத்துகள், அபிப்பிராயங்கள், உலக வரம்புகள் என்பவற்றை தூக்கி எறிந்துவிட்டு ‘உங்கள் குழந்தைகள்’ என்ற ஒரு விஷயம் மட்டும் முன்னுக்கு நிற்கட்டும். உலகுக்கு ஒரு நற்குணமுள்ள பிரஜையை உருவாக்கிய பெருமை உங்களைச் சேரட்டும்.
டாக்டர்
எஸ். அருள் இராமலிங்கம்