புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'பாபிப்ளூ' என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மருந்து, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறந்த பலனை அளிப்பதாக, கூறப்படுகிறது.
இந்த மாத்திரையை, 'கிளன்மார்க்' நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 21ல், இந்த மருந்து, இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஒரு மாத்திரை, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மருந்து தயாரிப்புக்கு தேவையான, முக்கிய மூலப்பொருட்களை, இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதி கிடைத்ததை அடுத்து, மாத்திரையின் விலையை குறைக்க, தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதையடுத்து, ஒரு மாத்திரையின் விலை, 103 ரூபாயில் இருந்து, 75 ரூபாயாக குறைக்கப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், அறிவித்தது. இதே மாத்திரை, சீனாவில், 215 ரூபாய்க்கும், வங்கதேசத்தில், 315 ரூபாய்க்கும், ரஷ்யாவில், 600 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், தெரிவித்தது.