சென்னை; ''கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை, வீட்டிற்குள் அமர்ந்தபடி கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, வருவாய் துறை அமைச்சர், உதய குமார் மறைமுகமாக சாடினார்.
சென்னை, அயனாவரம் பகுதியில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும், மாநகராட்சி ஊழியர்களுக்கு, கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை, அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி:கொரோனாவுக்கு, மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையிலும், உயிர் காக்கும் மருந்துகளை பயன்படுத்தி, மக்களை காக்கும் மகத்தான பணியில், முதல்வர் ஈடுபட்டுள்ார்.உலகில் பல்வேறு நாடுகளுக்கு முன் மாதிரியாக, நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சென்னையில், 84 லட்சம் மக்கள் உள்ளனர்.தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என, கண்காணித்து வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை குறைக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் அத்தி யாவசிய தேவையின்றி, வெளியில் வரக்கூடாது. மன உறுதியோடு, நம்பிக்கையோடு, இந்த சவாலில் வெற்றி பெறுவோம்.அரசு வழங்கும் அறிவுரைகளை பின்பற்றினால், நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோரை, வெளியில் வர அச்சப்பட்டு, வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்; அவர்கள் கனவு பலிக்காது.தொற்று ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு என்பதை, விவாதம் செய்வதற்கான நேரம் இதுவல்ல; மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நேரம்.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.