குப்பை கொட்ட போன பள்ளி மாணவி எரித்துக்கொலை

20 Views
Editor: 0

திருச்சி: மாணவியின் சடலத்தின் அருகில் மண்ணெண்ணெய் கேன், மற்றும் தீப்பெட்டிகள் கிடந்துள்ளது..

குப்பை கொட்டச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி முட்பு புதர் அருகே எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள், 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்துள்ளார். வீட்டைக் கூட்டிவிட்டு அதிலிருந்த குப்பையைக் கொட்டுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவியை நீண்ட நேரமாகக் காணாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்குச் சென்று பார்த்த போது மாணவி முட்புதரில் எரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

மாணவியை யார் கொலை செய்தது. ஏன் முட்புதரில் வீசவேண்டும் என்று பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது இவ்வழக்கு. சம்பவ இடத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சோமரசன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவியின் சடலத்தின் அருகில் மண்ணெண்ணெய் கேன், மற்றும் தீப்பெட்டிகள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்ததும் அவரது உறவினர்கள், `எங்களது பிள்ளையை யாரோ கொளுத்திருக்கிறார்கள் அவர்களைக் கைதுசெய்யுங்கள்’ என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு எஸ்.பி ஜியாவுல் ஹக் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர்.

மாவட்டச்செய்திகள்