சென்னை வடபழனி முருகன் கோவில் வாசலில் பக்தர்கள் வழிப்பட்ட காட்சி.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கிருத்திகை தினத்தில் கோவில்களில் குறிப்பாக முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக விழாக்கள் நடைபெறும். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தினத்தன்று பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து மனமுருக வேண்டி வழிபடுவார்கள். இந்த தினத்தில் வடபழனி முருகன் கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து இருக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வடபழனி முருகன் கோவில் நேற்று வழக்கமான உற்சாகம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.
ஆனாலும் பக்தர்கள் கோவில் வாசலிலேயே கற்பூரம் ஏற்றி முருகனை வழிபட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இந்தக் காட்சியை அனைத்து முருகன் கோவில்களிலும் பார்க்க முடிந்தது.