கடல் அரிப்பால் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

15 Views
Editor: 0

புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பால் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

    மீனவர் குடியிருப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

 

இங்குள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடலுக்கு அருகாமையில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

தற்போது ராட்சத கடல் அலையால் கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலை ஒட்டியுள்ள பெரும்பாலான மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க புது கல்பாக்கம் மீனவர் கடற்கரை பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி என இருபுறமும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று கடல் அரிப்பு குறித்த தகவல் அறிந்து வருவாய்த்துறை அதிகாரி காஞ்சனா, கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கடலோர காவல் படை போலீசார் புதுகல்பாக்கம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிசிடம் தகவல் தெரிவித்தனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

 

 

மாவட்டச்செய்திகள்