விவசாயிகளால் தப்பியது நன்மங்கலம் ஏரி தொடர்ந்து பராமரிக்க அரசுக்கு கோரிக்கை...
ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக கபளீகரம் செய்யப்படாமல், விவசாயிகளால் காப்பாற்றப்பட்ட ஏரிகளில், நன்மங்கலம் ஏரியும் ஒன்று. நீர்ப்பிடிப்பு பகுதிகளுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த ஏரிக்கு, தண்ணீர் மேலும் சேகரிக்க ஏதுவாக, அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.சென்னை, நன்மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள நன்மங்கலம் ஏரி, 130 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரியை நம்பி, 250 ஏக்கரில் விவசாயம் நடந்தது.100 ஏக்கரில் விவசாயம்காலப்போக்கில், நிலங்கள், வீட்டு மனைகளாக மாறவே, விவசாயம் மறைய துவங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் கூட, 100 ஏக்கரில் விவசாயம் நடந்தது. அதில், 70 விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். தற்போது, பெருமளவு விவசாயம் குறைந்து போனது.இருந்தாலும், தொடர் விவசாயத்தின் காரணமாகவும், விவசாயிகள் கண்காணிப்பாலும், இந்த ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் கட்சியினர், தங்களின் கைவரிசையை முழுமையாக காட்ட முடியவில்லை.அப்படி இருந்தும், 30 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில், நீர்ப்பிடிப்பு பகுதி, கரை பகுதி, ஏரி பகுதி ஆகியவற்றில், 140 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலத்திலும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது என, ஏரியின் மதகுகள் மற்றும் கரைகள் உடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.ஏரியில் இருந்து, உபரிநீர் செல்லும் போக்கு கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், மழைக் காலத்தில், குடியிருப்பு பகுதிகளில், பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.அரசு சிறப்பு நிதிகடந்தாண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம் நாளிதழ், 'களமிறங்குவோம் நமக்கு நாமே' எனும் திட்டத்தை அறிமுப்படுத்தி, தன்னார்வலர்கள், சமூக நல விரும்பிகள், பொதுமக்களை ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக, தென்சென்னை புறநகரில் உள்ள பல நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு, விமோசனம் பிறந்தது. நன்மங்கலம் ஏரியிலும், தன்னார்வலர்கள் மூலம் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன.பொதுப்பணித் துறை சார்பில், நன்மங்கலம் ஏரியின் கரைகள், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்டது. தற்போது, மழைநீரை சேகரிக்க ஏரி தயாராக உள்ளது.இருப்பினும், இந்த ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ள பகுதிகள், போக்கு கால்வாய் முழுமையாக மீட்கப்பட வேண்டும்.ஏரியை மேலும் ஆழப்படுத்தி, கரைகளில் நடைபாதை, பூங்கா வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். - -நமது நிருபர் --