பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் சென்னையில் 3 பேர் கைது

12 Views
Editor: 0

பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்..

சென்னை,

சென்னையில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் வைத்திருக்கும் பணத்தை கொள்ளை அடித்து ஒரு கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும் இதில் பாதிக்கப்படும் பிச்சைக்காரர்கள் போலீசில் புகார் கொடுப்பதில்லை. இதனால் இந்த கொள்ளையர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. புகார்கள் வராததால், போலீசாரும் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

கடந்த 18-ந் தேதி அன்று நள்ளிரவு சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய பிச்சை எடுக்கும் பெண் கண்ணம்மாள்(வயது 65) மற்றும் சங்கரன் (65) ஆகியோரை கொடூரமாக தாக்கி, அவர்கள் வைத்திருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதில் கண்ணம்மாளும், சங்கரனும் காயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசாருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பிச்சைக்காரர்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி துப்பு துலக்கினார்கள்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுலைமான் (வயது 23), தனபால் (20), சக்திவேல் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள். சைக்கோ மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களும் பிளாட்பாரத்தில்தான் படுத்து தூங்குவார்கள். நள்ளிரவில் கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொள்ளை வேட்டையை தொடங்குவார்கள்.

கொள்ளையன் சுலைமான் தனது 13 வயதில் இருந்தே கொள்ளை தொழிலை தொடங்கி விட்டார். போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள் என்பதால், இவர்கள் பிச்சைக்காரர்களை குறி வைத்து கொள்ளை தொழிலை நடத்தி வந்துள்ளனர். ஒரு நாள் வேட்டையில் 3 பேரிடம் கொள்ளை அடித்தால் போதும், ரூ.10 ஆயிரம் கிடைத்து விடும் என்று இவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இவர்களில் சுலைமான் மட்டும் ஒரு முறை சிறைக்கு சென்றுள்ளார். மற்ற இருவரும் தொழிலுக்கு புதியவர்கள் ஆவார்கள்.

மாவட்டச்செய்திகள்