தங்களின் அசையா சொத்துகளை விற்பனை செய்து சிகிச்சைக்கான ஓரளவுத் தொகையை ஏற்பாடு செய்துள்ளனர். மீதத் தொகையை செலுத்துவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த அடுக்கம்பாறை மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (32), ரயில்வே ஊழியர். இவர் மனைவி மாலதி (28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மாலதிக்குக் கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்ட சம்பவம், குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மாலதி வனத்துறை ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். தேனியில் பயிற்சி பெற்ற அவர், கடந்த டிசம்பர் மாதம்தான் சந்தவாசலில் பணி அமர்த்தப்பட்டார். அப்போதே அவருக்கு உடலில் பிரச்னைக்கான அறிகுறி இருந்திருக்கிறது. வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் கல்லீரல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
சி.எம்.சி மருத்துவமனை தகவல்
சி.எம்.சி மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். எனினும், ``கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே மாலதி உயிர் பிழைப்பார். மஞ்சள் காமாலையாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்’’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாலதிக்குக் கல்லீரல் தானம் கொடுக்க அவர் கணவர் ஆனந்தனே முன்வந்தார். இதையடுத்து,``சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தாமதிக்காமல் அங்கு செல்லவும்’’ என்று சி.எம்.சி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மாலதியும் அவர் கணவரும் ரேலா மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, கையில் இருந்த நகைகளை விற்று சி.எம்.சி-யில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டதால், மேற்கொண்டு பணம் இல்லாமல் மாலதியின் குடும்பத்தினர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனந்தனும் மாலதியும் அரசுப் பணியில் இருந்தாலும் இந்த ஊரடங்கு நேரத்தில் `இன்ஷூரன்ஸ்’ பெற முடியவில்லை. கேட்ட தொகை கிடைக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று கைவிரித்துவிட்டனர். இதையடுத்து, தங்களின் அசையா சொத்துகளை விற்பனை செய்து சிகிச்சைக்கான ஓரளவுத் தொகையை ஏற்பாடு செய்துள்ளனர். மீதத் தொகையை செலுத்துவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேலா மருத்துவமனை தகவல்
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான மொத்த ஏற்பாடுகளையும் ரேலா மருத்துவமனை மேற்கொண்டுவிட்டதால், மொத்தப் பணத்தையும் உடனடியாக செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு மாலதியின் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தாலும் அவரைக் காப்பாற்றுவதில் 10 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் சொல்லியிருக்கிறது என்கிறார்கள் மாலதியின் உறவினர்கள்.
``மிகவும் மோசமான நிலையில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கிறோம். மாலதியைக் காப்பாற்றிக் கொடுங்கள். தாயைப் பார்க்காமல் குழந்தை ஏக்கத்தில் இருக்கிறது. உடனடியாக சிகிச்சைக்கான கட்டணத் தொகை தேவைப்படுகிறது. விரைந்து உதவி செய்யுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மாலதி மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எங்களைக் கைவிட்டு விடாதீர்கள்’’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் மாலதியின் உறவினர்கள்.