வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
சென்னை: திருவள்ளூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நநிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 12 செ.மீ மழையும், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் 9 செ.மீ மழையும், சின்னக்கல்லாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ, ஹாரிசன் எஸ்டேட் மற்றும், கோவை மாவட்டம் சோலையார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
* ஆகஸ்டு 10ம்(தேதி), கேரளா-கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் விசக்கூடும்.
* ஆகஸ்டு 11ம் தேதி, கேரளா-கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 12ம் தேதி, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.