வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது. 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
வாணியம்பாடி,நவ.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நாட்றம்பள்ளி, அம்பலூர், ஆலங்காயம், காவலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளை போவதாக அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகன கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று வாணியம்பாடி முனீஸ்வரன் கோயில் அருகில் நகர போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேல்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு(34), மாதகடப்பா பகுதியை சேர்ந்த திருப்தி(24)என்று தெரிய வந்தது. இவர்கள்
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளான நாட்றம்பள்ளி, அம்பலூர், ஆலங்காயம், காவலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பிரபு மற்றும் திருப்பதி ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.