வாணியம்பாடி அருகே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை 9 பேருக்கு மாறி மாறி விற்பனை செய்து பத்திர பதிவு.
நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணாமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் மனு.
வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இளைய நகரம் பகுதியில் தனது தாய் வழி பாட்டிக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தினை விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரஜினிபாய் என்பவர் திருப்பத்தூர் சிவில் அமர்வு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 09-01-2025 அன்று வழக்கு சம்பந்தமாக வாய்தா போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிபாய் அவரது உறவினர்கள் 9 பேருக்கு மாறி மாறி நிலத்தை கிரையம் செய்து தற்போது மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு கூட்டாக சேர்ந்து பத்திர பதிவு செய்து நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தினை மனை அமைப்பதற்காக தண்டபாணி மற்றும் இளைநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரசிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு சென்று நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததை அறிந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று தட்டி கேட்டபோது தண்டபாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசி உன்னை ஜேசிபி வைத்து குழி தோண்டி புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து பத்திரப்பதிவு எப்படி செய்தார்கள் என பத்திரப்பதிவு அதிகாரிகளுடன் கேட்டபோது தடை மனு கொடுங்கள் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து போலி பத்திர பதிவு நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் போலி பத்திர பதிவு செய்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பத்திரை எழுத்தர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.