ஒருவருக்கு இரத்தசோகை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் இரத்தசோகையாகும்.
குறிப்பாக, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவதனால் ஏற்படுகிறது.
ஹீமோகுளோபின் என்பது திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவாகும்போது இரத்தசோகை ஏற்படுகிறது.
இந்நோய் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படும். ஏனெனில், பெண்களுக்குப் பல்வேறு நிலைகளில் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். அவர்கள் வளரும் பருவத்தில் - பூப்படையும் பருவத்தில் - கர்ப்பிணியாக இருக்கின்ற பருவத்தில் - பாலூட்டும் பருவத்தில் எனப் பல்வேறு பருவங்களிலும் அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படுகிறது.
இவ்வாறு தேவைப்படுகின்றபோது போதுமானளவு இரும்புச்சத்து கிடைக்காவிட்டால் இரும்புச்சத்து குறைவால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
பெண்களுக்குக் குறைந்தபட்சம் 14.5 கிராம் சதவீதம் அளவுக்காவது ஹீமோகுளோபீனின் அளவு இருக்க வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு ஹீமோகுளோபீனின் அளவு 10 கிராம் அளவுக்கும் குறைவாகவே இரும்புச்சத்து இருக்கும்.
சிலருக்குக் குடலில் கொக்கிப் புழுக்கள், பிற புழுக்கள் (சிஸ்டோ சோமியாஸிஸ்) அதிகமாக இருந்தாலும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் இரத்த இழப்பின்போது 30 மி.கி. அளவு இரும்புச்சத்து வீணாகிவிடும். இதனால் இரத்தப்போக்கு அதிகமாவதானாலும் இந்நோய் ஏற்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு இரத்தப்போக்கு ஏற்படவில்லையென்றபோதும் வளரும் சிசுவுக்கு அதிகமானளவு இரும்புச் சத்து தேவைப்படுவதால், இவர்களுக்கும் இரத்த சோகை ஏற்பட்டு விடும்.
குறிப்பாக, பாலூட்டும் நிலையிலும் போதுமான உணவு உண்ணவில்லை என்றாலும், உணவுச் சத்துகளின் பற்றாக்குறையின் காரணமாக இரத்தசோகை ஏற்படலாம்.
வயதான பெண்களுக்கும் மாதவிடாய் நின்றவர்களுக்கும் குடல் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் இரும்புச்சத்து குறைபாடுடைய இரத்தசோகை நோய் ஏற்படலாம். உடல் வலிக்கு பயன்படுகின்ற பல்வேறு மருந்துகளை எடுப்பதாலும் புற்றுநோயின் பாதிப்பினாலும் இரைப்பை, சிறுகுடல் புண்களினாலும் இவர்களுக்கு இரத்தக் கசிவு ஏற்படலாம்.
தினமும் சராசரியாக ஒருவருக்கு 2.5 மி.கி. அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் தோன்றும் காலங்களில் 1 மி.கி. அளவு அதிகமாக இரும்புச்சத்து தேவைப்படும். ஆகவே, மொத்தமாக, அப்பெண்களுக்கு தினமும் 3.5 மி.கி. அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும். மருத்துவ பரிசோதனையின் போது இவர்களுக்கு இரத்தசோகை இருப்பது தெரியவரும். பலருக்குப் பொதுவான பல்வேறு உடல் பிரச்சினைகளும் உபாதைகளும் ஏற்படும்.
அசதி, உடல் தளர்வு, பலமின்மை, நெஞ்சு படபடப்பு, தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், பார்வை மங்கல், உறக்கமின்மை, நெஞ்சு வலி, கை, கால், விரல்கள் மரத்து போதல், சுவாசமுட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மேலும், தோல் வெளுத்துப் போதல், இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும், காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். வாயின் ஓரப்பகுதியில் வெடிப்புத் தோன்றி, பாதிக்கப்பட்டு புண்கள்போல் காட்சியளிக்கும். நாக்குப் பகுதியிலும் புண்கள் தோன்றலாம். வீக்கமும், வலியும் ஏற்படலாம். நகத்தில் வெடிப்புகள் தோன்றியிருக்கும். சிலருக்கு நகம் தட்டையாக இருக்கலாம். வளைந்து, உட்குழிந்தும் காணப்படலாம்.
சிலருக்கு உணவு விழுங்குவதில் கஷ்டமிருக்கும். பலருக்கு சாதாரணமாக உணவு சாப்பிடக்கூடியவாறும் பிற உணவுகளை விட களிமண், மணல், சாம்பல் ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.
சிலர் தக்காளி அல்லது பச்சையாக உள்ள காய்கறிகளை சாப்பிட விரும்புவார்கள். இவ்வாறான நிலை, இரத்தசோகை இருக்கின்ற நேரத்தில் அதிகமாக ஏற்படும். சிலருக்கு மண்ணீரல் அதிகமாக வீங்கி விடும்.
இரத்தசோகை அதிகமாக இருக்கும்போது இதய செயலிழப்பும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்நோயை அறிவதாக இருந்தால் இரத்தப் பரிசோதனையின் மூலமே கண்டறியலாம். அவ்வாறு பார்க்கின்றபோது அவர்களின் ஹீமோகுளோபீன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். சிவப்பணுக்களின் அளவு சிறியவையாக இருப்பதுடன், வெளிறியும் காணப்படும்.
நீள்வட்ட செல்களும் காணப்படும். சிவப்பணுக்களின் எண்ணிக்கை சிறிது குறைவாக இருக்கலாம். எம்.ஸி.வி. எனப்படும் மொத்த செல்களின் அளவு குறைவாக இருக்கும். வெள்ளையணுக்கள் எப்போதும்போல் சாதாரணமாக காணப்படும். சில வெள்ளையணுக்களில் மையக்கரு பல பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கும்.
இரத்தச்சிவப்பு அணுக்களில் படியும் தன்மை (ஈ.எஸ்.ஆர்.) எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். எலும்பு மஜ்ஜையில் இரும்புச்சத்தின் குறைபாடு காணப்படும். இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரும்புச் சத்து சேரும் தன்மை அதிகரித்திருக்கும்.
குறிப்பாக, இவர்களுக்கு குடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்ற பரிசோதனை செய்வது அவசியமாகும். மலத்தில் இரத்தம் உள்ளதா? என்பதனையும் கண்டறிவது அவசியமாகும். இதற்கென பிரத்தியேகப் பரிசோதனைகள் உள்ளன. கதிரியக்க சக்திகொண்ட ‘குரோமியம்’ சேர்க்கப்பட்ட சிவப்பணு செல்களைச் செலுத்தி, அவை எவ்வளவு குடலின் மூலம் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனையும் உள்ளது.
மல பரிசோதனையில் கிருமிகள், புழுக்களின் முட்டைகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும். ‘செயற்கை வால்வு’ பொருத்தியவர்களுக்கும் இதுபோன்ற இரத்தசோகை ஏற்படலாம்.
பெண்களுக்கு இடைவிடாமல் அடிக்கடி மாதவிடாய் போவதும் அதிகளவில் போவதும் மிகவும் முக்கியமான காரணங்களாகும். அடிக்கடி கர்ப்பிணியாகி, குழந்தை பெறுவதும் ஒரு முக்கியமான காரணமாகும்.
இரத்தசோகை நோயைக் குணப்படுத்த முன்னர், இந்நோய் என்ன காரணத்தால் உண்டானது என்பதைக் கண்டறிய வேண்டும். அதனைப் போக்கினாலேயே நோயும் சரியாகிவிடும்.
வயிற்றில் கொக்கிப் புழுக்களின் பிரச்சினை இருந்தால் அவற்றை அழிப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் பிரச்சினைக்கு உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை செய்யவேண்டும். அடிக்கடி கர்ப்பிணியாவதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்கள், கட்டிகள், புற்றுநோய்கள் ஆகியவற்றுக்குரிய சிகிச்சைகளும் அவசியமாகும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுக்கவேண்டும். குறிப்பாக, பேரிச்சம்பழம், முருங்கை கீரை, பப்பாளிப் பழம், கல்லீரல், இறைச்சி ஆகியவற்றை இவர்கள் அதிகமாக சாப்பிட்டால் இந்நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.