தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனை
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்துக்கு மிகவும் சிறப்புகள் உண்டு. மாரியம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக இது உள்ளது. விவசாயிகள் தங்கள் நடவு பணியை தொடங்க ஆடி மாதத்துக்காக காத்து இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆடி மாதத்தை கொங்கு மண்டல மக்கள் வெகு சிறப்பாக வரவேற்பது வழக்கம். குறிப்பாக இளம் தேங்காயில் துளையிட்டு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை போட்டு அதை ஒரு நீண்ட குச்சியில் சொருகி வீதியில் விறகால் தீ மூட்டி, தேங்காயை சுட்டு எடுப்பார்கள். பின்னர் அதை கடவுளுக்கு படைத்து பூஜை செய்து, பெண்கள் கும்மி ஆடி மகிழ்வார்கள். சுடப்பட்ட தேங்காயை உடைத்து அதில் உள்ளே இருக்கும் பொருட்களை பிரசாதமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இப்படி மிக சுவையான உணவுடன் தொடங்கும் ஆடி மாதம் முதல் நாள் கோவில்களும் விழாக்கோலமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்தாலும், ஆடி மாதத்தை வரவேற்க மக்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. இதை முன்னிட்டு தேங்காய் சுடும் குச்சிகள் வழக்கம்போல நேற்று வ.உ.சி. பூங்கா தற்காலிக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வமாக குச்சிகளை வாங்கிச்சென்றனர். இன்று (வியாழக்கிழமை) மாலை தேங்காய்சுடும் நிகழ்வு நடைபெறும்.