ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அண்மையில் தனது இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்ட்டை அறிமுகப்படுத்தி தொழிலை நடத்தி வருகிறது. கொரோனா நெருக்கடிக்கு இடையே இதுவரை காய்கறிகள், பழங்கள், பால்பொருட்கள், மளிகைப் பொருட்களை, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை ஜியோமார்ட் டெலிவரி செய்து வருகிறது.
இந்நிலையில், பண்டிகைக்காலம் நெருங்கி வருவதால் ஸ்மார்ட்போன்கள், ஆடைகள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் என பல்வகை பொருட்களையும் விற்பனை செய்ய ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது. முழுவீச்சில் இயங்கக்கூடிய ஒரு இ-காமர்ஸ் நிறுவனமாக உருமாறுவதற்கு ஜியோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரிலையன்ஸ் ரீட்டெய்ல் ஸ்டோர்களும் கூட தனது பொருட்களை ஜியோ மார்ட் மூலமாகவே டெலிவரி செய்து வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டியிடுவதற்காக ஜியோமார்ட் ஒவ்வொரு படியையும் கவனமாக எடுத்து வைக்கிறது. இதுபற்றி தொழில்துறை வட்டாரத்தில், “இ-காமர்ஸ் துறைதான் தற்போது ரிலையன்ஸுக்கு மிகப்பெரிய திட்டம்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்க வேண்டுமென்றால் ஜியோமார்ட் நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சேவை வழங்க வேண்டும். பொருட்களை வேகமாக டெலிவரி செய்வதும் மிக அவசியம்” என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஜியோமார்ட்டுக்கு பிரத்யேகமாக ஸ்மார்ட்போன் செயலிகள் இல்லை. இணையதளம் வாயிலாக மட்டுமே ஆர்டர்களை மேற்கொள்ள முடிகிறது.
கிராமங்களுக்கும் சேவை வழங்குவது, விரைவான டெலிவரி மட்டுமல்லாமல், ஃப்ளிப்கார்ட், அமேசானுடன் போட்டியிடுவதற்கு பொருட்களின் விலையும் மிக அவசியம். எனினும், நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் ஸ்டோர்களில் பொருட்களின் விலை மிகக் குறைவாக இருப்பதால் விலை போட்டியிலும் சிக்கல் இருக்காது என தொழில்துறையினர் கூறுகின்றனர்.
ஜியோமார்ட் இதுவரை மும்பையில் மட்டும் சுமார் 5,000 கிரானா சிறு மளிகைக் கடைகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கடைகளை இணைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. ரிலையன்ஸ் ஸ்டோர்களில் இல்லாத பொருட்களை கிரானா கடைகள் விநியோகிக்கின்றன. இதுவரை நாடு முழுவதும் 200 நகரங்களில் ஜியோமார்ட் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 முதல் 70,000 ஆர்டர்களை ஜியோமார்ட் பூர்த்தி செய்து வருகிறது.