வலிமை படத்தின் பிஜிஎம் எப்படி இருக்கும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.
தல அஜித்தின் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்து வருகிறார். அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த படத்திற்காகத்தான். இதற்கு முன்பு பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பிஜிஎம் ரசிகர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்தன என்பதால் மீண்டும் அஜித்துக்கு யுவன் எப்படி பிஜிஎம் கொடுப்பார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நேற்று இது பற்றி ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்ட கேள்விக்கு யுவன் பதில் அளித்துள்ளார்.
"வலிமையோட பிஜிஎம் எப்படி இருக்கும் அண்ணா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்" என ரசிகர் ஒருவர் கேட்க.. "அதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன" என தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி தளபதி விஜய் உடன் பணியாற்றுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. "தளபதி மூவி பண்ணுங்க தலைவா" என ரசிகர் கூறியதற்கு நான் எப்போதும் தயார் என யுவன் தெரிவித்துள்ளார்.
மேலும் "தளபதி பற்றி ஒரு வார்த்தை" கூறுங்கள் என கேட்டதற்கு, "அவர் என்னை அதிகம் இன்ஸ்பயர் செய்திருக்கிறார்" என பதில் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி தல அஜித் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை கூறுங்கள் என கேட்டதற்கு, "நம்ம தல" என யுவன் சங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுவன் மதம் மாறியது பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். நீங்கள் ஏன் இஸ்லாம் வழிபடுகிறீர்கள். திருமணத்திற்காகவா அல்லது உண்மையிலேயே இஸ்லாம் மீது காதல் வந்ததா? என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய யுவன் 'அது உண்மையான காதல் மட்டுமே' என தெரிவித்துள்ளார்.
தற்போது வலிமை பிஜிஎம் பற்றி யுவன் தெரிவித்திருக்கும் பதில் இணையத்தில் ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகின்றது. ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவரது ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க உள்ளார். அஜித்துக்கு இணையாக அவருக்கும் படத்தில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறது என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடத்தில் துவங்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் துவங்க சற்று தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் இந்த வருடம் துவங்க வாய்ப்பில்லை, அடுத்த வருடம் துவங்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும். அதனால் சினிமாத்துறை மீண்டும் சகஜ நிலைமைக்கு வர சில காலம் ஆகலாம் என்று தெரிகிறது.