ஜகமே தந்திரம் படத்தை நேரடியாக ஓடிடி இணையதளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது. அதற்க்கு தனுஷ் ஒப்புக்கொள்வாரா?
நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். அந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மே ஒன்றாம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால்
ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்பட்டது. முழுமையாக முடிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் பல மெகா பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்று. விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டு வருகிறது. அதனால் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நேரடியாக ஓடிடி இணையதளங்களில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பெண்குயின் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் நேரடியாக ரிலீசாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்கள் மற்ற சில இணையதளங்களில் வரும் வாரங்களில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
இன்னிலையில் ஜகமே தந்திரம் படத்தினை நேரடியாக ஓடிடி இணையதளம் ஒன்றில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ள நிலையில், அதன் நேரடி போட்டி ரிலீஸ் பற்றி ஹீரோ தனுஷ் ஒப்புக் கொண்டால் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனுஷும் ஒரு தயாரிப்பாளரின் பார்வையில் இந்த விஷயத்தை அணுகி. ஓடிடி ரிலீஸுக்கு ஒப்புதல் வழங்கி விட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தற்போது செய்தி பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வரவில்லை.
கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய பாணியில் கேங்ஸ்டர் த்ரில்லர் படமாக இதனை உருவாக்கி உள்ளார். ஜகமே தந்திரம் படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் லண்டனில் தான் நடைபெற்றது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தின் கதையை பற்றி பேசி இருந்தார். அவர் அந்த படத்தில் லண்டனில் பெரிய டானாக இருப்பவராக நடித்துள்ளார். அங்கு இருக்கும் இந்தியர்களை சமாளிக்க தமிழ்நாட்டில் பெரிய டானாக இருக்கும் தனுஷ் லண்டனுக்கு வர வைப்பார் ஜேம்ஸ் காஸ்மோ. அவர்கள் இருவரும் நெருக்கமாக மாறுவது போலவும் அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் பற்றி தான் கதை இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
கதையைப் பற்றி அவர் பேட்டியில் வெளிப்படையாகக் கூறிவிட்டாலும், தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இருவரும் சேர்ந்து ஒரு மேஜிக்கை நிகழ்த்துவார்கள் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கின்றனர்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இதில் ஜோஜு ஜார்ஜ், கலையரசன் மற்றும் சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.