கமல்ஹாசனின் விஸ்வரூபம், விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வந்தன.
தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. விஜய்யின் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டுள்ளார்.
முதல்வன் 2-ம் பாகம் வரும் என்றும் அதில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடித்துள்ள சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று அந்த படத்தின் டைரக்டர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து ஜான் மகேந்திரன் கூறும்போது, “சச்சின் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். அதன் 2-ம் பாகத்தில் விஜய்யை பார்க்க எனக்கு ஆர்வம் உள்ளது. அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
சச்சின் படம் 2005ல் வெளியானது. இதில் விஜய் கல்லூரி மாணவராக நடித்து இருந்தார். நாயகியாக ஜெனிலியா வந்தார். இந்த படம் தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.