மீண்டும் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு? இயக்குனர் இவர் தான்

19 Views
Editor: 0


வடிவேலு மீண்டும் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது..

 

நடிகர் வடிவேலு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு தன்னுடைய காமெடி மூலமாக அனைவரையும் ஈர்த்தவர். அவர் சமீபத்திய வருடங்களில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும் அவரது முகத்தை சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் நாம் மீம்கள் வடிவத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அவர் விட்டுச் சென்ற இடத்தை வேறு எந்த நடிகராலும் தற்போது வரை நிரப்ப முடியவில்லை என்பதால் ரசிகர்கள் வடிவேலு மீண்டும் எப்போது சினிமாவில் நடிக்கத் துவங்குவார் என்று தான் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக வடிவேலு விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஹீரோவாக நடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் ஷுட்டிங் துவங்கிய நிலையில் இயக்குனருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது. சூப்பர்ஹிட் ஆன இம்சைஅரசன் 23ம் புலிகேசி படத்தின் அடுத்த பாகம் தான் இது.

வடிவேலு திடீரென வெளியேறியது தொடர்பாக அந்த படத்தினை தயாரித்து வந்த இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். வடிவேலு ஷுட்டிங் வர மறுத்ததால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது எனவும், இப்படத்திற்காக அதிகம் செலவு செய்து போடப்பட்ட செட் வீணானது என்றும் ஷங்கர் குற்றம் சாட்டியிருந்தார். அது தொடர்பான பஞ்சாயத்து முடிந்த பாடில்லை, இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அதற்குப் பின்னால் வடிவேலு எந்த புதிய படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து இயக்குனர் 

சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக வடிவேல் நடிக்க உள்ளார் என தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. சுராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வடிவேலு தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தலைநகரம் படத்தில் வரும் நாய் சேகர் கதாபாத்திரம் மற்றும் மருதமலை படத்தில் அர்ஜுனுடன் அவர் நடித்த காமெடியான போலீஸ் கதாபாத்திரம் என அவர்கள் கூட்டணி சேர்ந்த படங்கள் அனைத்திலும் காமெடியில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வடிவேலு.

தற்போது அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள் என பரவி வந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை என்பதால் இந்தப் படம் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிகிறது. காரணம் இதற்கு முன்பு வடிவேலு தான் ஹீரோவாக நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடிவேலு கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள தலைவன் இருக்கின்றான் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என சென்ற வருடமே அறிவிப்பு வெளியானது. இருப்பினும் கமல் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருப்பதால் தலைவன் இருக்கின்றான் படம் துவங்குவது சற்று தாமதமாகும் என்று தெரிகிறது. மேலும் வடிவேலு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள ஒரு படத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தலைவன் இருக்கின்றான் படம் தவிர வேறு எந்த படங்கள் பற்றியும் வடிவேலு இதுவரை உறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.