‘தளபதி 65’ படத்தின் சம்பளத்திலிருந்து நடிகர் விஜய் ரூ.20 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் அதிக வசூலைக் குவித்து வருகின்றன. அதனால் அவரது சம்பளமும் உயர்ந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிகில் பட வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.80 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்துக்கு விஜய் ரூ.100 கோடி சம்பளம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு ‘தளபதி 65’ பட சம்பளத்திலிருந்து ரூ.20 கோடியை குறைத்துக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
‘தளபதி 65’ படத்துக்கு இசையமைக்க தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பிரச்னை முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 9-ம் தேதியே வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படமும் கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் மலையாள முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி உள்ளிட்ட ஒரு சிலர் வெளிப்படையாக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். அதேபோல் முன்னணி நடிகரான அஜித்தும் வலிமை படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக போனி கபூரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.