துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கினே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வந்தார். படத்தை தயாரித்து நடித்து வந்தார் விஷால். பிப்ரவரி மாதம் வரை படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் மிஷ்கின் செலவை அதிகப்படுத்திவிட்டதாகக் கூறி அவருக்கும், விஷாலுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மிஷ்கின் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். மிஷ்கின் விலகியதை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவது என்று விஷால் முடிவு செய்தார்.
மிஷ்கின் வெளியேறிய பிறகு அவர் பெயர் இல்லாமல் படத்தின் போஸ்டர் ஒன்றையும் விஷால் வெளியிட்டார். விஷால் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்து நடிகர் ஆனவர். அதனால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதில் சிரமம் இருக்காது என்று கூறப்பட்டது. இருப்பினும் மீதமுள்ள காட்சிகளை விஷால் இயக்கினால் அதில் மிஷ்கின் டச் இருக்காது. படத்தின் அவுட்புட் சிறப்பாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்தது.
விஷால் என் சொந்த தம்பி போன்றவர். அவரை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று மிஷ்கின் தெரிவித்தார். இருப்பினும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின் விஷால் பற்றி கூறியதாவது,
நான் இதுவரை ரூ. 13 கோடி செலவு செய்தேன் என்கிறான் விஷால். நான் 32 நாட்கள் ஷூட் செய்தேன். நான் நாள் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் செலவு செய்தேன் என்றான். ரூ. 13 கோடி என்பதையும் அவன் நிரூபிக்கணும். ஒவ்வொரு இடத்திலும் நான் அவமதிக்கப்பட்டேன். என் தாயை வேசி என்று திட்டினான். நான் என் தம்பி என்று நினைத்தவன் என் தாயை வேசி என்று திட்டினான்.
அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நான் செய்த ஒரே துரோகம் அறத்துடன் இருந்தது தான். அவன் தப்பு பண்ணும்போது எல்லாம் பண்ணாதன்னு சொன்னது தான். நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இந்நிலையில் பழசை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய விஷால் மிஷ்கினுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. துப்பறிவாளன் 2 ஸ்க்ரிப்ட்டை மிஷ்கின் படமாக்கினால் தான் நன்றாக இருக்கும் என்று விஷால் கருதுவதாக கூறப்பட்டது.
இது குறித்து மிஷ்கினுக்கு நெருக்கமான ஒருவர் கூறியிருப்பதாவது,
துப்பறிவாளன் பிரச்சனை தொடர்பாக விஷால் இன்னும் மிஷ்கினை தொடர்பு கொள்ளவில்லை. இது எல்லாம் வெறும் வதந்தி தான். தற்போதைக்கு மிஷ்கின் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க தயாராகி வருகிறார் என்றார்.
துப்பறிவாளன் 2 படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அந்த படத்தில் பிரசன்னா, கவுதமி, நாசர், லவ்லி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். துப்பறிவாளன் 2 படம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மிஷ்கின் சிம்பு மற்றும் அருண் விஜய்யை வைத்து தலா ஒரு படம் எடுக்கிறார். இதையடுத்து அந்த படங்களின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் மிஷ்கின். அருண் விஜய் நடிக்கும் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஆகும். அதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
விஷால் புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.