கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமலிருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் திரையரங்குகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களை சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் வரை சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களை நம்பியிருக்கும் நிலை உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.