இந்தியன் 2 பிரச்னையால் தர்பார் செட்டில்மென்ட் தாமதம்...

20 Views
Editor: 0


Exclusive : இந்தியன் 2 பிரச்னையால் தர்பார் செட்டில்மென்ட் தாமதம்... ரஜினி வீடுவரை சென்றும் பயனில்லை - விநியோகஸ்தர்கள் வேதனை.

தர்பார் படத்தில் விநியோகஸ்தர்களுக்கே பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால், தியேட்டர்களுக்கு வழங்க வேண்டிய டிபாசிட் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தால் தர்பார் படத்தின் நஷ்ட ஈட்டை தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வினியோகஸ்தர் தரப்பில் கூறப்படும் நிலையில், ஊரடங்கு காலத்தில் ஊதியம் கூட வழங்க முடியாமல் தவிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கான டெபாசிட் தொகையை வழங்க வேண்டும் என போர்கொடி தூக்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதில் குறிப்பாக லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் பிரச்னை எழுந்தது. யூனின் வரை பிரச்னை கொண்டு செல்லப்பட்டு இயக்குனர் டி.ராஜேந்தர் முன்னிலையில் உரிய இழப்பீடு வழங்க லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தர்பார் பிரச்னை வினியோகஸ்தர்களுடன் முடிவு பெறவில்லை. தியேட்டர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக படம் இரு முறைகளில் வெளியிடப்படுகிறது. மினிமம் கியாரண்டி என்கிற முறையிலும், டிபாசிட் முறையிலும் தான் படங்களை வினியோகஸ்தர்கள் வெளியிடுகின்றனர். பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை போட்டி போட்டு வாங்கும் முயற்சியில் டிபாசிட் முறையில் தியேட்டர் உரிமையாளர்கள் வாங்கி விடுகின்றனர்.

ஆனால் அந்த படம் தோல்வியை தழுவும் போது தியேட்டர் உரிமையாளர்கள் செய்யும் டிபாசிட் தொகையை விநியோகஸ்தர்கள் வழங்குவார்கள். ஆனால் தர்பார் படத்தில் விநியோகஸ்தர்களுக்கே பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால், தியேட்டர்களுக்கு வழங்க வேண்டிய டிபாசிட் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பொதுவாக இது போன்ற நெருக்கடியான சூழல் வரும் போது அடுத்த வினியோகிக்கும் படத்தை வைத்து விநியோகஸ்தர்கள் சமாளித்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அடுத்து எந்த படமும் வெளியாகததால் தியேட்டர்களுக்கு செய்ய வேண்டிய செட்டில்மெண்ட் இன்னும் நிறைவுபெறவில்லை.

மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதே சவாலான விசயமாக இருக்கும் நிலையில் விநியோகஸ்தரிடம் இருந்து கிடைக்க வேண்டிய தொகையும் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த தியேட்டர் ஒன்றின் மேலாளரிடம் நமது மதுரை தலைமை செய்தியாளர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியபோது, ‘‘தங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பாக்கி இருப்பதாகவும், மொபைலில் தொடர்பு கொண்டால் அழைப்பை கூட விநியோகஸ்தர் எடுப்பதில்லை,’’ என்றும் வேதனை தெரிவிக்கிறார்.இதே போல் அடு்த்தடுத்து படங்கள் வெளிவராமல் விநியோகஸ்தரும் பணம் தராமல் தாங்கள் ஊதியம் வழங்க கூட சிரமப்படுவதாக கூறுகிறார் மதுரை தியேட்டர் ஒன்றின் மேலாளரான குரு. 40 ஆண்டுகளாக தியேட்டரை மட்டுமே நம்பி இருந்த தனக்கு இந்த சோதனையான காலகட்டம் கடும் சிரமத்தை தருவதாக வேதனை தெரிவிக்கிறார் புரொஜக்டர் ஆபரேட்டர்.

ரசிகர்கள் மழையில் நனைந்த மதுரை தியேட்டர் சோக கீதம் இசைக்க என்ன காரணம் என்பது குறித்து தர்பார் படத்தின் மதுரை விநியோகஸ்தர் வினோத்திடம் கேட்ட போது, ‘‘லைக்கா நிறுவனம் தருவதாக கூறிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட விபத்தால் சிரமத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு கூறுகின்றனர். ரஜினி வீடு வரை சென்றும் பயனில்லை,’’ என்று புலம்பும் அவர், ‘‘வாங்கிய கடனுக்காக தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்வதால், அடுத்து அவர்கள் எப்போது படம் எடுத்து, எங்களுக்கு கொடுத்து, நாங்கள் எப்படி அதை வைத்து வியாபாரம் செய்யப்போகிறோம் என்பதே தெரியவில்லை,’’ என, நொந்து கொள்கிறார்.

இந்தியன் 2 பிரச்னை தர்பார் படத்தின் தியேட்டர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் விநியோகஸ்தர்களிடமிருந்து வரவேண்டிய தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.