கனடாவில் இருந்து நடிகர் விஜய் மகன் சென்னை திரும்பினார் தனிமைப்படுத்தப்பட்ட பின், வீடு சென்றார்

15 Views
Editor: 0

நடிகர் விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாசா என்ற மகளும் இருக்கிறார்கள்..

 

சென்னை,

நடிகர் விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாசா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில், “நான் அடிச்சா தாங்க மாட்டே” என்ற பாடல் காட்சியில், ஜேசன் சஞ்சய் நடனம் ஆடியிருந்தார். பின்னர் அவர் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார். கனடாவில் தங்கியிருந்து, சினிமா தொழில்நுட்ப உயர் கல்வி படித்து வந்தார். அவர் படிப்பு முடிந்து கனடாவில் இருந்து சென்னை திரும்ப இருந்தபோது, கனடா உள்பட சர்வதேச அளவில் கொரோனா நோய் பரவ தொடங்கியது.

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. ஜேசன் சஞ்சய் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விஜய் குடும்பத்தினர் கவலை அடைந்திருப்பதாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. கனடாவில் ஜேசன் சஞ்சய் நன்றாக இருப்பதாகவும், மகனுடன் விஜய் அடிக்கடி பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், ஜேசன் சஞ்சய் சென்னை திரும்பினார். சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், வீட்டில் சில நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜேசன் சஞ்சய் பத்திரமாக சென்னை திரும்பியதால், விஜய் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.