மும்பை: கொரோனா அச்சம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு, கொரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களையும், 10 வயதுக்கு உட்பட்ட நடிகர்களையும் ஷூட்டிங் செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே வறுமையில் வாடி தவிக்கும் சாதாரண மூத்த நடிகர்களின் நிலை, இது போன்ற அறிவிப்பால், மேலும், கேள்விக்குறிக்கு உள்ளாகும் எனக் கூறி, இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த நடிகர் பிரமோத் பாண்டே என்பவர், நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூத்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது என்றும், இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மகாராஷ்ட்ரா அரசுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
குழந்தை நட்சத்திரங்கள் கூட, அவர்களுக்கு பெற்றோர்கள் இருப்பார்கள், அதனால், பிழைத்துக் கொள்வார்கள், தன்னை போன்ற வயது முதிர்ந்த கலைஞர்கள், இந்த சினிமாவையே நம்பி இருக்கும் நிலையில், வேலை இல்லாமல் போனால், சாவதை தவிர வேறு வழியில்லை என உருக்கமாக பேட்டியும் கொடுத்துள்ளார்.