மறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான படம் ஜானி. இன்றுவரை ரஜினிகாந்த் நடித்த சிறந்த படங்களுள் ஒன்றாக இருக்கும் இந்தப் படம் வெளியான சமயத்தில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் மட்டுமின்றி மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நண்டு உள்ளிட்ட அனைத்து படங்களும் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றதோடு இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இயக்குநர் மகேந்திரனின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜானி ரீமேக்கில் அஜித் நடிக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளதாவது, இயக்குநர் மகேந்திரனின் படங்கள் அனைத்தும் இயக்குநருக்கான படங்கள். அதை ரீமேக் செய்வது சாத்தியமிலை. என் அப்பாவே ரீமேக் செய்வதை விரும்பியதில்லை. முள்ளும் மலரும் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய சொன்னபோது கூட அவர் செய்யவில்லை. அதை தவிர்த்திருக்கிறார். உறுதியாகவும் இருந்தார்.
அஜித்துக்கு ஜானி ரீமேக் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஒருமுறை அவர் அப்பாவை சந்தித்துவிட்டு சென்றதாக கேள்விப்பட்டேன். ஜானி படத்தை ரீமேக் செய்ய விரும்பினால் அதில் தான் நடிக்க விரும்புவதாகவும், தனக்கு பிடித்த படம் என்றும் அஜித் என் அப்பாவிடம் கூறியிருக்கிறார்.
அப்பாவும் அஜித்துக்கு அந்தக் கதையை ரீமேக் செய்தால் சரியாக இருக்கும் என்று தான் கூறினார். மகேந்திரன் இயக்கத்தில் மட்டுமே ஜானி ரீமேக்கில் நடிக்க அஜித் விரும்பினார். என் அப்பா விருப்பப்பட்டால் அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்வதாக அஜித் கூறினார். ஆனால் அப்பாவுக்கு எப்போதுமே ரீமேக் செய்வதில் விருப்பம் இருந்ததில்லை” இவ்வாறு ஜான் மகேந்திரன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.