தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ரலா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். சாம்ராட் தகால் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2 வருடத்திலேயே விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“கொரோனாவால் நாட்டில் நிலவும் சூழல் என்னை பயமுறுத்தவில்லை. ஏற்கனவே இதைவிட மோசமான புயல்கள் எனது வாழ்க்கையில் வீசி உள்ளன. அவற்றோடு ஒப்பிடும்போது கொரோனா எனக்கு சாதாரணமாகவே தெரிகிறது. வழக்கம்போல் அமைதியாகவே இருக்கிறேன். தியானம், யோகா செய்கிறேன். இயற்கையோடு உரையாடுகிறேன். எனது பெற்றோர்களுடனும் செடிகளுடனும் நேரத்தை செலவிடுகிறேன். மும்பையில் பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பறவைகள் சத்தம் கேட்கிறது. இதற்கு முன்பு இந்த அமைதியான சூழலை நான் கண்டது இல்லை. எனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இல்லை. நோய் பாதிப்புக்கு பிறகு தனியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.”
இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.