சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #NadippinNayagan, #HappyBirthdaySuriya ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் சூர்யா இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளதையும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படம் மூலம் நடிகர் ஆனவர் சூர்யா. பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படம் அவரின் கெரியரையே மாற்றிப் போட்டது. சூர்யாவின் கெரியரில் மறக்க முடியாத படமாக நந்தா அமைந்தது.
சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியுமா என்று ரசிகர்கள் வியந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் அன்புச் செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். எத்தனை போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வந்தாலும் ரசிகர்களால் அன்புச் செல்வனை இன்னும் மறக்க முடியவில்லை. கவுதம் மேனன், சூர்யா கூட்டணி மேஜிக் கூட்டணி ஆனது.
காக்க படத்தில் சீரியஸாக நடித்த அதே சூர்யா தான் பிதாமகன் படத்தில் காமெடி செய்து நம்மை எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். தன்னால் பல வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தார். பேரழகன் படத்தில் சின்னா கதாபாத்திரத்திற்கு உடலில் ஊனம் இருந்தாலும் அதன் நம்பிக்கை நம்மை எல்லாம் ஈர்த்தது. சின்னாவாக நம்மை சிரிக்க வைத்ததுடன், ஃபீல் பண்ணவும் வைத்தார் சூர்யா.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படத்தை பார்த்து பாலிவுட்காரர்கள் கூட மிரண்டு போனார்கள். அந்த படம் மூலம் நடிப்பில் வேறு லெவலுக்கு சென்றார் சூர்யா. கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடித்த வாரணம் ஆயிரம் காதலர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. அந்த படத்திற்காக சூர்யா தன் உடலை வருத்தி நடித்தது வீண் போகவில்லை.
அயன், ஆதவன் என்று ஒரு டிராக்கில் சென்று கொண்டிருந்த சூர்யா ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்தார். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று சூர்யா பேசிய பன்ச் வசனம் இன்றும் பிரபலம். சூர்யாவால் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் சிங்கம். அந்த படத்தை அடுத்து சிங்கம் 2, 3 ஆகியவை வெளியாகின. இருப்பினும் ரசிகர்களுக்கு சிங்கம் தான் ஸ்பெஷல்.
சூர்யா மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ஏழாம் அறிவு படம் சூப்பர் ஹிட்டானது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது ஏழாம் அறிவு பற்றி தான் அனைவரும் பேசினார்கள். சூர்யா தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் தான் ஒப்புக் கொண்ட படங்களில் முழு அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. காப்பானை அடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் படத்தில் சூரரைப் போற்று நடித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யா பல கெட்டப்புகளில் வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படாமல் இருந்திருந்தால் சூரரைப் போற்று படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருக்கும். சூர்யா நடிகராக மட்டும் அல்ல ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவர் தயாரிக்கும் படங்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன.