தமிழ் சினிமாவின் படு பிசியான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை அவர் கைவசம் வைத்திருப்பார் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் படத்திற்காகத்தான். இந்த படத்தில் தளபதி விஜய்யின் வில்லனாக இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் இதுதான்.
இது ஒருபுறமிருக்க விஜய் சேதுபதி அடுத்த படம் பற்றி ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. இயக்குனர் ஏ. எல். விஜய்யுடன் விஜய் சேதுபதி கூட்டணி சேர உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹைலைட் என்னவென்றால் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்க உள்ளார் என்பது தான். அவர்கள் இருவரும் இந்த படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் விஜய்யுடன் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது விஜய்யுடன் அவருக்கு மூன்றாவது படம்.
விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் உடன் கூட்டணி சேர்வது இது தான் முதல் முறை. இந்த படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தான் தயாரிக்க உள்ளார்.
அனுஷ்கா நடிப்பில் தமிழில் கடைசியாக பாகமதி என்ற படம் தான் வெளியாகியிருந்தது. அதற்குப் பிறகு சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் வெளிவந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள நிசப்தம் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நேரத்தில் தான் தியேட்டர்கள் கொரோனா காரணமாக மூடப்பட்டுவிட்டது. இந்த படத்தில் மாதவன் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிசப்தம் படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியாகலாம் என சென்ற மாதம் செய்தி பரவிய நிலையில் தயாரிப்பாளர் அதை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி தன் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்திருக்கிறார். அதில் மாஸ்டர் படம் தான் மிக முக்கிய ஒன்று. இந்த படத்தில் மிக கொடூர வில்லனாக நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். இந்த படம் இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். கொரோனா பிரச்சினை முடிந்து மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுகிறதோ அதனை பொருத்து தான் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் இருக்கும் என தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேட்டியளித்திருந்தார்.
விஜய் சேதுபதியின் மற்ற படங்களான கடைசி விவசாயி, லாபம், கா/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மேலும் தெலுங்கில் உப்பேனா என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும் ஹிந்தியில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
மேலும் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்க வாய்ப்பு இருக்கிறது என தயாரிப்பாளர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள் அரசு ஷூட்டிங் தொடங்க அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.