சூரி, சூர்யாவை அடுத்து மீண்டும் தனுஷ் உடன் சேரும் வெற்றிமாறன்

15 Views
Editor: 0

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

தனுஷின் அசுரன் படத்துக்கு பின்னர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்க தயாரானார் வெற்றிமாறன். இந்தப் படத்துக்கான பணிகள் நடந்து வந்த போதே அசுரன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யாவின் வாடிவாசல் பட அறிவிப்பும் வெளியானது.

சூரி நடிக்கும் படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் இருப்பதாகவும், தற்போது இருக்கும் கொரோனா பிரச்னை காரணமாக உள்நாட்டிலேயே படமாக்குவது போல் கதையை வெற்றிமாறன் மாற்றி வருவதாக கூறப்படுகிறது. முதலில் சூரி நடிக்கும் படத்தை முடிக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு காளைகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே நேற்று வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைந்து பணியாற்ற இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தனுஷூக்கு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன் அடுத்து வடசென்னை இரண்டாம் பாகத்தை கையிலெடுக்கப்போகிறாரா அல்லது புதிய கதையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.