''டைரக்டர் மேலயோ சேனல்கிட்டயோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சூழ்நிலை சரியில்லாம இருந்தா யார் என்ன செய்ய முடியும்? ஆனா, எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா?'' - நடிகை ரக்ஷா
"கொரோனா எல்லோரையும் கொடுமைபடுத்திட்டிருக்கு. சொந்த ஊரான பெங்களூருலயும் சரி, ஷூட்டிங் நடக்கிற சென்னையிலயும் சரி கொரோனா பரவல் தீவிரமா இருக்கிறதால ஷூட்டிங் அனுப்ப வீட்டுல பயப்படுறாங்க. அதனால இந்த மாதக் கடைசி வரைக்கும் டைம் கேட்டேன். ஆனா பாருங்க, `டக்’குனு ஹீரோயினையே தூக்கிட்டாங்க. எனக்கு அந்தத் தகவலைக்கூடச் சொல்லலை’' - வருத்தத்தோடு பேசுகிறார் ரக்ஷா. `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர். தொடர்ந்து அவரிடம் பேசினேன்.
"2018-ல் ஆரம்பிச்சு லாக்டௌனுக்கு முன்னாடி வரைக்கும் நல்லா போயிட்டிருந்த சீரியல்தான். நானும் ரேஷ்மியும் (இவரும் பெங்களூருதான்) ஹீரோயின்களா நடிக்க, செந்தில் ஹீரோவா நடிச்சார். கொரோனா வந்தாலும் வந்தது. இப்ப என்னவெல்லாமோ நடந்து எல்லாமே மாறிடுச்சு.
ரக்ஷா
லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க. சென்னையில தங்கியிருந்தாக்கூட எப்படியாவது ஷூட்டிங்ல கலந்துக்க முயற்சி பண்ணியிருப்பேன். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். கூடவே கொஞ்சம் அவகாசம் கேட்டேன்.
டைரக்டர் தரப்புல இருந்து எந்தப் பதிலும் வராத சூழல்ல, சென்னைல முழு லாக்டௌன் போட்டுட்டதால அந்த ஷூட்டிங்கே நாலு நாள்ல நின்னுடுச்சு.
திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை. நானா இயக்குநருக்குப் பேசினப்ப, ‘அடுத்து என்ன நடக்கும்னு எனக்கும் தெரியலை’ன்னுதான் சொன்னார். அதோடு விட்டுட்டேன். ரேஷ்மியுமே ஷூட்டிங் போகலை.
இந்தச் சூழல்லதான் ’சீரியலை அப்படியே முடிச்சுட்டாங்க’ன்னும்,அதோட சீஸன் 2 ஷூட் தொடங்கிடுச்சுன்னும் கோ ஆர்ட்டிஸ்ட் சிலர்கிட்ட இருந்து எனக்குத் தகவல் வந்தது.
அதற்கான ஷூட்டிங் சென்னையில நேத்து (13.7.2020) தொடங்கியிருக்கு. ஹீரோ செந்தில்தான். ஆனா ஹீரோயினா ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன். ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துகளைச் சொல்லிக்க ஆசைப்படுறேன்.
டைரக்டர் மேலயோ சேனல்கிட்டயோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சூழ்நிலை சரியில்லாம இருந்தா யார் என்ன செய்ய முடியும்? ஆனா எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா, `இதுதான் சூழல், வேற வழி இல்லை’ன்னு எனக்குத் தகவல் சொல்லியிருக்கலாம்'' என்கிறார் ரக்ஷா.
ரக்ஷாவைப் போல் ரேஷ்மியும் `நாம் இருவர் நமக்கு இருவர்’ இரண்டாவது சீஸனில் இல்லையென்றே தெரிகிறது. இந்த சீரியலைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு இரட்டை வேடம். ரக்ஷா இல்லாட்டி ரக்ஷிதா என ஒரு ஆளை மாற்றிவிட்டார்கள். இன்னொரு ஹீரோயின்? சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேசினேன்.
மிர்ச்சி செந்தில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில்
"இப்போதைக்கு ரச்சிதா மட்டும் கமிட் ஆகியிருக்காங்க. இன்னொரு ஹீரோயின் இருப்பாங்களா யாருங்கிறதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். நடந்த ஆள் மாற்றங்களெல்லாம் யாரும் விரும்பி நடத்தல. சில ஆர்ட்டிஸ்டுகள் தயங்காம ஷூட்டிங்ல கலந்துக்குறாங்க. சிலர் பயப்படுறாங்க. ரேஷ்மியும் ரக்ஷாவும் பெங்களூருவுல இருந்து இங்க வர பயந்தாங்க. ரச்சிதாவும் அதே பெங்களூருல இருந்துதான் வர்றாங்க. அவங்கவங்க தனிப்பட்ட முடிவுகளும் இதுல அடங்கியிருக்கு" என்றார்கள்.
செந்தில், `சரவணன் மீனாட்சி’ முதல் சீஸனின் ஹீரோ. ரச்சிதா அந்த சீரியலின் 2 மற்றும் 3 வது சீஸன்களின் ஹீரோயின். இந்தக் காம்பினேஷன் எப்படி இருக்கப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.