பெண்கள் மறைக்க எதுவுமில்லை... கொண்டாட நிறையவே இருக்கு! - `பேரழகி சமீரா ரெட்டி'
பிசியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு செட்டிலான சமீரா, இன்று அழகான இரண்டு குழந்தைகளின் அம்மா.
அழகில் அள்ளிய அதே சமீரா, நரைத்த தலை, பொலிவிழந்த சருமம், தொளதொள தொப்பையுடன் வெளியிட்ட அந்த லேட்டஸ்ட் வீடியோ செம வைரல். தான் அழகாக இல்லை என்று வருத்தம் பகிர்ந்திருந்த ஓர் அம்மாவுக்கான பதில்தான் சமீராவின் அந்த வீடியோ. உருவகேலிக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வரும் சமீராவிடம் சினிமா, தாய்மை, கம்பேக் எனப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. பேசினோம்.
‘`#ImperfectlyPerfect என்ற கேம்பெயினுக்காக பண்ணின வீடியோ அது. பெண்கள்னா இப்படித்தான் இருக்கணும்னு வலியுறுத்தப்படும் கருத்துகளை மாற்றி, அவை நமக்கு ஏற்படுத்தற அழுத்தங்களைப் போக்கணும்னு நினைச்சு நான் ஆரம்பிச்ச முயற்சி இது.
சுய மதிப்பு, அழகு தொடர்பான எதிர்பார்ப்புகள், நம்மை நாமே நேசிப்பது, நம்மைப் பற்றி நல்லவிதமாக உணர்வது... இப்படிப் பல விஷயங்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பதிவுகள் போட்டுட்டு வரேன். ஒருவகையில் அது என்னுடைய உண்மையான முகத்தையும் பிரதிபலிக்கிறதா உணர்ந்தேன். பருமன், சருமம் தொய்வடைவது, முடி நரைப்பது, வயசு சம்பந்தமான பிரச்னைகள் இவையெல்லாம் எல்லாப் பெண்களுக்கும் இருக்கும். அதுக்காக விரக்தியோ, வேதனையோ கொள்ளத் தேவையில்லை, வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள் எத்தனையோ இருக்குன்னு பெண்களுக்குப் புரியவைக்கத்தான் அந்த வீடியோ போட்டேன். தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, நடிகைகள், குடும்பத்தார்னு எல்லாத் தரப்புலேருந்தும் எக்கச்சக்க பாராட்டுகள்... குறிப்பா என் கணவருக்கு இதுல ரொம்ப பெருமை...’’ - வீடியோவுக்கான விளக்கத்துடன் உரையாட லுக்குள் போகிறார்.
சமீரா ரெட்டி
‘`2010-ல அக்ஷயை மீட் பண்ணினேன். அவரைப் பார்த்ததுமே எனக்கானவர்னு மனசுக்குள்ள மணியடிச்சது. 35 வயசுல கொஞ்சம் லேட் மேரேஜ். எனக்குக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால கல்யாண மானதுமே குழந்தை பெத்துக் கிறதுல உறுதியா இருந்தேன்.
தாய்மை... அந்த உணர்வைப் பற்றி நிறைய பேசலாம். 2015-ல் என் முதல் குழந்தை ஹன்ஸ் பிறந்தான். பிரசவத்துக்குப் பிறகு நிறைய குழப்பங்கள், பயம். எனக்கு போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் இருந்தது. ஆனா, அது எனக்கே தெரியலை. காரணமே தெரியாம நிறைய அழுதிருக்கேன். யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லாம தனித்துவிடப்பட்டதா ஃபீல் பண்ணியிருக்கேன். 32 கிலோ வெயிட் போட்டேன். ஒரு நடிகையா எப்போதும் இந்தச் சமூகத்துக்கு அழகானவளா காட்சிதர வேண்டியவளா இருந்த எனக்கு, தாய்மை என்ற திடீர்ப் பொறுப்பும், எக்கச்சக்கமா ஏறிப்போன பருமனும் அந்த பிம்பத்தை உடைச்சதா ஃபீல் பண்ணினேன். அந்தக் குழப்பமான மனநிலையிலேருந்து எப்படி வெளியில வரப்போறேன்னு தெரியாம தவிச்சிருக்கேன். சரியான ட்ரீட்மென்ட், கவுன்சலிங், அம்மா, மாமியார், கணவர்னு அத்தனை பேரின் அன்புன்னு எல்லாம் என்னை மீட்டுக் கொண்டு வந்தன.
சமீரா ரெட்டி
எக்கச்சக்கமா வெயிட் போட்டு, டிப்ரெஷன்ல சுயமரியாதையே இல்லாம உணர்ந்த நாள்கள் அவை. மக்கள் என்னை ஏத்துப்பாங்களான்னு பயந்திருக்கேன். ட்ராலுக்கு பயந்து என்னை நானே மறைச்சுக்க நினைச்சு சோஷியல் மீடியாலேருந்து சில காலம் விலகியிருந்தேன். அந்த இடைப்பட்ட நாள்கள்ல நான் உணர்ந்த விஷயங்களும் எனக்குள்ள ஏற்பட்ட தெளிவும்தான் இன்னிக்கு என்னை ஸ்ட்ராங்கான மனுஷியா மாத்திருக்கு’’ - விமர்சனங்களுக்கு பயந்து தன்னை ஒளித்துக்கொண்ட அதே சமூக ஊடகத்தின் வழியேதான் இன்று உருவகேலிக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங் களையும் செய்கிறார் சமீரா.
‘`நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து பாடி ஷேமிங்கை எதிர்கொண்டவள் நான். குழந்தையா இருந்தபோது கொழுகொழுன்னு செம குண்டா இருப்பேன்; என்னுடன் பிறந்தவங்க ஒல்லியா இருப்பாங்க. அவங்களோடு என்னை ஒப்பிட்டு விமர்சிப்பாங்க. சினிமாவுக்கு வந்தபோது உயரமா, நல்ல உடல் வாகோடு இருந்தேன். ஹீரோக்களைவிட உருவத்துல சின்னவளா இருக்கணும்னு எனக்கு அட்வைஸ் வந்திருக்கு. பாடி ஷேமிங் என்பது நடிகைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னை. இதை வளரவிடக் கூடாது, பெண்கள் இதை நினைச்சுக் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. என் பதிவுகளின் நோக்கம் அதுதான்’’ - பொறுப்பாகப் பேசுபவர், நடிப்பிலிருந்து விலகினாலும், நிறைமாத கர்ப்பத்துடன் தண்ணீருக்குள் போட்டோஷூட், கெட் டப்பை மாற்றி மாமியாருடன் அடிக்கும் ரகளை வீடியோ என எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
‘`நடிப்பிலிருந்து நான் விலகலை. பிரேக் எடுத்திருக்கேன். குழந்தை வளர்ப்பில் அதீத கவனம் செலுத்தற அம்மா நான். என் மகளுக்கு ஒரு வயசுதான் ஆகுது. ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு, நான் நடிப்புக்குத் திரும்பலாம்னு எனக்கு நம்பிக்கை வரும்போது நிச்சயம் மறுபடி வருவேன். கல்யாணம், குழந்தை மாதிரியான விஷயங்கள் ஒரு நடிகையின் கரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கிறவை இல்லை. கண்டிப்பா மறுபடி வருவேன்.
ரெண்டாவது குழந்தை வேணும்னு உறுதியா இருந்தேன். ஹன்ஸுக்கு நாலு வயசாகணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தோம். அப்புறம் நைரா பிறந்தாள். முதல் கர்ப்பத்தில் நான் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணியிருந்தது தெரிஞ்சது. `உடம்பைக் காட்டாதே', `ஸ்ட்ரெச் மார்க்ஸைக் காட்டாதே', வயிற்றைக் காட்டாதே'.... இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்ஸ். அந்த நாள்களை நான் என்ஜாய் பண்ணவே இல்லை. ரெண்டாவது முறை எதையும் தவறவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அதைக் கொண்டாட நினைச்சேன். அண்டர்வாட்டர் போட்டோகிராபிக்குத் தயாரானேன். `இதுதான் நீங்க, இதுதான் உங்களுக்கான டைம், இது உங்களுடைய சூப்பர் பவர், இது மறைக்க வேண்டிய விஷயமில்லை, கொண்டாடப்பட வேண்டியது'ன்னு எல்லாப் பெண்களுக்கும் சொல்ல நினைச்சேன்.
என் மாமியார்... என் வாழ்க்கையில நான் சந்திச்ச அற்புதமான மனுஷி. மாமியார் - மருமகள் உறவு எப்போதும் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கு. ரெண்டு பேருக்கும் எந்தக் காலத்துலயும் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறாங்க. அந்தப் பார்வையை மாத்த நினைச்சேன். லாக்டெளன்ல நானும் என் மாமியாரும் சேர்ந்து பண்ணின ஃபன் வீடியோக்களுக்கு செம ரெஸ்பான்ஸ்.
அப்புறம் என் கணவர் அக்ஷய். சீரியஸ் பிசினஸ்மேன். அமைதியானவர். 32 கிலோ வெயிட் போட்டிருந்தபோதும், ‘நீ பேரழகி’னு என்னைக் கொண்டாடினவர். இப்படியொரு கணவர், கடவுள் கொடுத்த வரங்களாக ரெண்டு குழந்தைகள்னு வாழ்க்கை அவ்வளவு அழகா மாறியிருக்கு. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. சந்தோஷமா இருக்கிறது மட்டும்தான் ஒரே பிளான்” - சிரிக்கிறார், சிலிர்க்க வைக்கிறார்.