தனுஷ் சிட்டி ரோபா மாதிரி - வியந்து போன ‘ஜகமே தந்திரம்’ நடிகை:
ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் தனுஷ் நடிப்பை வியந்து பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடியிருப்பதால் இன்னும் திரைக்கு வரவில்லை.
சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் உடன் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் ஒரே ஒரு பிரேமில் மட்டும் தோன்றியிருப்பார். அவர் இந்தப் படத்தில் சுருளி என்ற தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஜகமே தந்திரம் படத்தில் நடித்தது குறித்து பேட்டியளித்திருக்கும் சஞ்சனா, “கார்த்திக் சுப்புராஜ் ஆஃபிஸ்க்கு பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களது ஒரு வெப் சீரிஸில் நடிக்க அழைக்கப்பட்டேன். ஜகமே தந்திரம் படத்தின் ஒரு கதாபாத்திரத்துக்காக நடிகையை தேடிக்கொண்டிருப்பதை அறிந்தேன். என்னுடன் பணியாற்றியவர்கள் எனது பெயரை பரிந்துரை செய்திருந்தார்கள். நான் எதை விரும்பினேனோ அதைப்போன்ற ஒரு வாய்ப்பு. அந்த கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
முதல் நாள் ஷூட்டிங்கில் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். தனுஷ் என்னை சகஜமாக்கினார். அவருடைய நடிப்பை நாள் முழுவதும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் டேக் முதல் மூன்றாவது டேக் வரை அதே எனர்ஜியுடன் இருக்கிறார். அவர் ஒரு சிட்டி ரோபோ மாதிரி தனக்கான கதாபாத்திரம் முழுவதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்கிறார்” என்று கூறியுள்ளார்.