எஸ்.பி.பி., நலமுடன் உள்ளார்: எம்ஜிஎம் மருத்துவமனை ரிப்போர்ட் :
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை ஸ்திரமுடன் உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னையில் வசித்து வரும் பிரபல பின்னணி பாடகர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தான் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவமனையில் நன்றாக கவனித்து வருவதாகவும் எஸ்.பி.பி., வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் லேசான கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பி.,யின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. அவரை, மருத்துவ நிபுணர்கள் கவனித்து வருகின்றனர். வழக்கமான ஆக்சிஜன் அளவு பராமரிக்கப்பட்டு வருகிறது. தனக்காக வேண்டுதல் மற்றும் பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கு எஸ்.பி.பி., நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.