அரசியலுக்கு வர முடிவா? - நடிகர் லாரன்ஸ் விளக்கம்:
நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா ஊரடங்கில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்றவற்றுக்கு பல கோடி நிதி வழங்கினார். அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க பணம் கொடுத்தார். வெளிமாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல உதவினார். அதோடு அவர் நடத்தும் ஆதரவரற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளையும் படிக்க வைக்கிறார். இதையடுத்து லாரன்ஸ் அரசியலுக்கு வர முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவின.
இதற்கு விளக்கம் அளித்து டுவிட்டரில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று ஏழை மக்களுக்கு தொண்டு செய்வேன் என்று சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட அமைதியாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்துக்கு சேவை செய்வது சிறந்தது என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் பதிவிட்டுள்ள வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்றாக இருக்கிறது. குழந்தைகளின் கனவுகள் நனவாகி இருப்பதையும் பார்க்கலாம். 200 குழந்தைகள் படிக்கிறார்கள். அரசியலுக்கு வராமல் இதை செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள்” என்று கூறியுள்ளார்.