சென்னை,
1 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல்:
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், நடிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.
எனினும், கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இணைய தளத்தில் இந்த படத்தினை வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட ரகிட பாடல் தற்போது யூடியூப் வலைத்தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடல் கடந்த ஜூலை 28ந்தேதி தனுஷின் பிறந்த நாளன்று வெளியானது. இதே நாளில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டது.