லாக்கப்:
நடிகர் | வைபவ் |
நடிகை | வாணி போஜன் |
இயக்குனர் | எஸ்.ஜி.சார்லஸ் |
இசை | அரோல் கொரேலி |
ஓளிப்பதிவு | சந்தானம் சேகர் |
விமர்சிக்க விருப்பமா?
இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை ஈஸ்வரி ராவ் விசாரிக்கும் நேரத்தில், பூர்ணா தற்கொலை செய்ததாக சடலம் கிடைக்கிறது.
மைம் கோபி கொலைக்கும், பூர்ணாவின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார் ஈஸ்வரி ராவ். இறுதியில் மைம் கோபியை கொலை செய்தது யார்? பூர்ணா எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபியின் எதார்த்தம், ஈஸ்வரி ராவ்வின் திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. ஒருநாள் வேலை பார்த்தாலும் என் வேலையை ஒழுங்கா பார்ப்பேன் என்று கெத்து காட்டியிருக்கிறார் ஈஸ்வரி ராவ். சப் இன்ஸ்பெக்டராக வரும் வெங்கட் பிரபு வில்லத்தனத்தில் கவர்ந்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக நடித்திருக்கும் வைபவ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். வாணி போஜனுக்கு அதிகமாக வேலை இல்லை. வீட்டு வேலைக்காரியாக வரும் பூர்ணா, அலட்டல் இல்லாத நடிப்பு.
இரண்டு மரணங்கள் தொடர்பான மர்மக் கதையை சில திருப்பங்களோடு, 'கொலையை யார் செய்தது' என்ற சஸ்பென்ஸை கடைசிவரை நீட்டித்து, படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். முதல் படம் என்று தெரியாதளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில், நிரபராதிய கொல்றதுக்கு நாங்க ஓண்ணும் போலீஸ் இல்லையே?, என்ற ஒரு சில வசனங்கள் பலம் கூட்டியிருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
இசையமைப்பாளர் ஆரோல் கரோலியின் பின்னணி இசையும், சந்தானம் சேகரின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘லாக்கப்’ விறுவிறுப்பு.