தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? -அமைச்சர் சொல்வது இதுதான்!
தமிழகத்தில் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள திரையரங்குகள் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.. 150 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தியேட்டர்களை திறப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ,"தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு சொல்லும் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
முன்னாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், குறிப்பிட்ட தேதியில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், ரிலீசுக்காக காத்திருக்கும் புதிய திரைப்படங்கள் ஓடிடி தொழில்நுட்ப வசதியுடன் ஆன் -லைனில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன என்பதும், தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.