சந்தானத்தின் 'டிக்கிலோனா'வில் இளையராஜாவின் ஹிட் பாடல் - என்ன பாடல் தெரியுமா?
‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன் சங்கர்ராஜா.
சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.
அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.
இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை 'டிக்கிலோனா' படத்திலும் இடம்பெறவுள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு.
கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.