ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பார்... வடிவேலு பாலாஜி இறப்பிற்கு ரோபோ சங்கர் உருக்கம்
ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பார் என்று வடிவேலு பாலாஜி இறப்பிற்கு ரோபோ சங்கர் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதனிடையே பணவசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். வடிவேல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர், வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி உள்ளிட்ட நண்பர்கள் சென்று நலம் விசாரித்து திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.