வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்துவந்தால் அந்த நாள் மிகவும் சிறப்புவாய்ந்தது. வியாழக்கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்துவருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார்.
தட்சிணாமூர்த்தி
குருவின் மகிமை
தகுதி உடையவர்கள் தமது தானம், தவம் முதலியவற்றால் உயர்நிலையை எளிதில் அடைந்துவிடுவர். தகுதி இல்லாதவர்கள், வினைப்பயன்களால் துன்புறுபவர்கள் இறைவனின் திருவடியை அடைவது எளிதன்று. அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த உலகில் இறைவன் தன் அம்சமாக மகான்களைப் படைக்கிறார். சீடனின் தகுதியால் அல்ல; குரு தன் தகுதியால் அவர்களை உயர்நிலைக்கு உயர்த்தி இறைவடின் திருவடியில் சேர்க்கிறார்.
சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.
நலம் தரும் நந்தி!
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (2/7/20) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ
என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.