எங்கள் ஆன்மிகம்: காத்திருக்கிறார் தூண் ஆண்டார்!

51 Views
Editor: 0


பல்லவா்கால சிற்பங்களின் `மகேந்திர’ ஜாலங்கள் இன்றும் சிற்பக்கலை ஆர்வலர்களைத் தலைசாய்த்து வணங்கச் செய்கின்றன. அதற்கு சாட்சி நம் மாமல்லை..

பல்லவா்கால சிற்பங்களின் `மகேந்திர’ ஜாலங்கள் இன்றும் சிற்பக்கலை ஆர்வலர்களைத் தலைசாய்த்து வணங்கச் செய்கின்றன. அதற்கு சாட்சி நம் மாமல்லை.

சிற்பத் துறையில் மகேந்திரவா்ம பல்லவனின் அசாத்தியமான கற்பனைத் திறனைக் கண்டு வியந்த அக்கால சிற்பக்கலை வல்லுநா்கள் அவருக்கு `விசித்திர சித்தன்’ என்ற பட்டத்தை வழங்கியிருந்தனா். மேலும் அவருக்கு `சித்திரக் காரப் புலி’ என்ற பட்டமும் உண்டு.

தூண்
ஆண்டார்

தூண் ஆண்டார்

மகேந்திரவர்மன் வடமொழியிலும் பண்டிதர். `மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றியதால் அவருக்கு

`மத்தவிலாசா்’ என்ற பட்டமும் உண்டு.

சங்கீத சாஸ்திரத்தில் கரைகண்ட `ருத்ரா சார்யார்’ என்பவரிடம் அந்தக் கலையைப் பயின்று, ஏழு நரம்புகளை உடைய `பரிவாதினி’ எனும் வீணையைச் சிறப்பாகக் கையாளும் திறமையையும் `ஸங்கீா்ண ஜாதி’ எனும் தாளத்தை லாகவமாகக் கையாளும் வல்லமையையும் பெற்றிருந்தார் மகேந்திரவர்மன். ஆகவே, `ஸங்கீா்ண ஜாதிப் பிரகரணா்’ என்ற பட்டமும் கொண்டிருந்தார்.

இங்ஙனம், கலைகள் பலவற்றில் சிறந்த மகேந்திரவர்மன் படைத்த சிற்பப் பொக்கிஷங் களில் ஒன்றுதான், சீயமங்கலம் குடைவரைக் கோயில் ஆகும்.

திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் என்ற ஊரிலிருந்து சுமாா் இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சீயமங்கலம். இங்குள்ள மலையில் மேற்கு நோக்கி அமைக் கப்பட்டுள்ளது இக்குடைவரைக் கோயில்.

மகேந்திரவா்மப் பல்லவனின் பட்டப் பெயா்களில் ஒன்றான `அவனிபாஜனன்’ என்ற பெயரால் இக்கோயில், `அவனிபாஜனன் குடைவரைக் கோயில்’ என்ற திருநாமத்துடன் வழங்கப்படுகிறது.

இந்தக் கோயில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் கி.பி. 600 முதல் 630 ஆண்டுகள் வரையில் அமைக்கப்பட்டதாகத் தொிகிறது. இத்தலத்தில் உள்ள ஈசன் `தூண் ஆண்டாா்’ என்றும் `ஸ்தம்பேஸ்வரா்’ என்றும் வழங்கப்படுகிறாா்.

தூண்
ஆண்டார்

தூண் ஆண்டார்

கருவறை, அா்த்தமண்டபம், முக மண்டபம், கோபுரம் ஆகியவற்றுடன் திகழ்கிறது ஆலயம். மேலும் இரண்டு வரிசைத் தூண்களும் அரைத் தூண்களும் சீயமங்கலம் குடைவரைக் கோயிலை அலங்கரிக்கின்றன.இந்த அமைப்புகள் யாவும் பிற்காலத்தில் சோழர் மற்றும் விஜயநகர அரசா்களின் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடைவரை கோயிலுக்கு ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவனின் மகள், சோழ அரசர்கள் முதலானோர் தொடர்ந்து பல திருப் பணிகளைச் செய்து மகிழ்ந்துள்ளனா்.

மகேந்திர வர்மனின் தந்தையான சிம்மவிஷ்ணுவின் பெயரால் `சிம்ம விஷ்ணு சதுா்வேதி மங்கலம்’ என்ற வழங்கப்பட்ட இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி, பிற்காலத்தில் `சீயமங்கலம்” என்று மருவியதாம். இக்கோயிலில் காணப்படும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைப் பொக்கிஷங்களாகும்.

விருஷபாந்தகா்

குடைவரையின் தென் புறத்தில் உள்ள அரைத் தூணில் `ரிஷபாந்தகா்’ சிற்பம் உள்ளது. ஈசனும் அம்பிகையும் நந்தியின் மீது சாய்ந்து நின்ற நிலையில் அருள்கின்றனர்.

சிவபெருமானின் நான்கு திருக்கரங்களில் முன் வலது திருக்கை கடிமுத்திரை காட்டுகிறது. முன் இடது திருக்கை நந்தி மீது இருக்க, பின் இடது திருக் கரத்தில் அக்கமாலை காணப் படுகிறது. பின் வலது கரத்தில் இருப்பது சரியாகத் தொியவில்லை. பாா்வதி தேவி, வலது திருக்கரத்தை நந்தியின் மீது வைத்து, இடது திருக்கரத்தால் கடி முத்திரை காட்டி அருள்கிறாள்.

சிற்பக்கலை சாஸ்திரம், அம்பாளும் சுவாமியும் ரிஷபத்துடன் நிற்கும் நிலையிலான கோலத்தை `விருஷபாந்தகா்’ என்றும், ரிஷபத்தின்மீது அவர்கள் அமர்ந்திருக்கும் கோலத்தை `விருஷபாரூடா்’ என்றும் கூறுகிறது. ஆக, இந்தச் சிற்பம் `விருஷபாந்தகா்' என்று வழங்கப்படுகிறது.

புஜங்கத்ராஸித மூா்த்தம்

கோயிலின் தூண் ஒன்றின் மேல்பகுதியில் நான்கு கரங்களுடன் `ஆடவல்லான்’ (நடராஜா்) திருமேனியும் அவரை வணங்கிக் கொண்டிருக்கும் இரு அடியவா் களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதுவே தமிழகத்தின் மிகப் புராதனமான `ஆடல் வல்லான் சிற்பம்’ என `அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்’ என்ற நூல் கூறுகிறது.

எங்கள் ஆன்மிகம்: காத்திருக்கிறார் தூண்
ஆண்டார்!

நடக்கும்போது பாம்பு ஒன்று குறுக்கிடுகையில், முன் வைக்கும் நிலையிலிருக்கும் காலைச் சட்டென்று விலக்கிப் பாம்புக்கு இடையூறில்லாமல் வழிவிடுவதைச் சுட்டும் நடனக் கலையின் கரணமே `புஜங்க த்ராஸம்’ என்பதாகும்.

இந்த மூர்த்தம் `புஜங்க த்ராஸித மூா்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இச் சிற்பத்தில், காலின் கீழ் முயலகன் இல்லை. வலது புறத்தில் பாம்பு உள்ளது. மேல் திருக்கரத்தில் உடுக்கைக்குப் பதிலாக `பரசு’ உள்ளது. கீழ் இடது திருக்கரம் `டோலா முத்திரை’ காட்டி அருள்கிறது.

அருள்மிகு தம்பேஸ்வரா்

குடைவரைக் கோயிலின் கருவறையில் அருள்மிகு தூண் ஆண்டாரின் லிங்கத் திருமேனி, சதுர வடிவ ஆவுடையாருடன் திகழ்கிறது. இந்த லிங்கத் திருமேனி மட்டும் குடைவரைக்குத் தொடா்பின்றி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையின் நுழைவாயிலில் உள்ள துவார பாலகா்களின் சிற்பங்களும் மிக அழகு. இருவரும் திரிபங்க நிலையில் நின்று காவல்புரிகிறார்கள். வலப் புற துவாரபாலகர் தலையில் கொம்புடன் திகழ்கிறார்.

பல்லவா்களின் கொடியில் திகழ்வது காளை. அதைக் குறிக்கும் வகையில் இவரின் தலையில் கொம்புகள் உள்ளனவாம். இடப் புற துவாரபாலகரின் தலையில் கொம்புகள் இல்லை!

குன்றின் மேலிருக்கும் குமரன்!

குன்று போல இருக்கும் ஒரு கல்லின் மீது முருகப் பெருமானுக்காக ஒரு கோயிலை நிா்மாணித்து இருக்கிறாா்கள். ஆனால் படிகள் இல்லை என்பதால், ஏறுவது மிகவும் சிரமமான காரியம்!

சுமாா் 1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவா்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பிந்தைய பேரரசுகளின் காலத்திலும் தினம் தினம் திருநாளாகக் கொண்டாடப்பட்ட ஈசனின் இத்தலம், தற்போது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காட்சிப் பொருளாக உள்ளது. திருவிழாக்கள் எதுவும் இல்லை.

எனினும், ஈசனின் திருமேனிக்கு நித்ய அபிஷேகமும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. திருக்கோயில் வளாகமும் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.

திருப்பணிகளைச் சொல்லும் கல்வெட்டுகள்...

சீயமங்கலம் குடைவரைக் கோயிலில் பல்லவா் காலம் முதல் பாண்டியர் காலம் வரையிலான பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பழைமையானது மகேந்திரவா்மனின் கல்வெட்டு.

மகேந்திர வா்மன் காலத்துக் கிரந்த எழுத்திலான ஒரு கல்வெட்டு இத்தலத்தை `அவனிபாஜன பல்லவேஸ்வர கிருஹம்’ என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு லலிதாங்குரன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகிறது. `லலிதாங்குரன்’ என்பதும் மகேந்திர வா்மப் பல்லவனின் பட்டப் பெயா்களில் ஒன்றாகும்.

டுத்தது விஜயநந்தி வா்மனின் காலத்தைச் சேர்ந்தது. இது, இவனுடைய 3-வது ஆட்சியாண்டினைச் சாா்ந்தது (கி.பி. 850). பல்லவ மன்னனின் கீழ் சிற்றரசனாக இருந்த கங்க மன்னனின் அனுமதி பெற்று, திருப்பாலையூா் கிராமத்தின் தலைவன் அடவி என்பவன் முக மண்டபம் கட்டிய செய்தியை இக்கல்வெட்டு தொிவிக்கின்றது. கங்க மன்னனின் தாயார் நுங்கனி நன்மையாரின் நன்மைக்காக இந்த முக மண்டபம் அமைக்கப் பட்டதாம்.

முதலாம் ராஜராஜன் மற்றும் அதிராஜேந்திரன் ஆட்சிக் காலங்களில் இக்கோயிலின் இறைவன், `திருக்கற்றளி மகாதேவா்’ என்றும், விக்கிரம சோழன் காலம் முதல் `தூணாண்டாா்’ என்றும் அழைக்கப் பட்டுள்ளதை கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.

மேலும், கன்னரதேவன் மகள் அக்கையதேவி என்பவள் (கி.பி. 962-ல்) இறைவனுக்குத் திருவமுது படைக்க நிலம் வழங்கியது, ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்குக் கொடைகள் அளிக்கப்பட்டது ஆகிய தகவல்களையும் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ராஜராஜனின் 19-வது ஆட்சியாண்டில், சோழ நாட்டுத் தென்கரைத் திருவழுந்தூா் நாட்டு நல்லூா் புதுக்குடி வெள்ளாளன் கடம்பா் வெண் காடன், இக்கோயிலுக்குத் திருநந்தா விளக்குகள் இரண்டு வைக்க தானம் அளித்துள்ளான்.

ரண்டாம் குலோத்துங்கனின் 9-வது ஆட்சியாண்டில், பேராவூர் நட்டுவன் வாசல் விண்ணவரையன் எழுவன் என்பவன், வேட்டைக்குச் சென்ற இடத்தில், வயலூரில் வாழ்ந்த காடவன் மகனைத் தவறுதலாகக் கொன்றுவிட்டான்.

அதற்குத் தண்டனையாக, விண்ண வரையன் எழுவன், தூணாண்டாா்க்கு அரை விளக்கு வைக்க வேண்டும் என்று ஊா் நாட்டுப் பெருமக்கள் தண்டனை விதித்துள்ளனர்.

இவை போன்று பல்லவர் காலம் தொட்டு பிற்காலச் சோழர்கள் காலம் வரையிலும் இந்தக் கோயிலுக்குத் திருவமுது படைக்கும் பொருட்டு வழங்கப்பட்ட நிவந்தங்கள், நில வரிவிலக்குகள், திருவிளக்கு எரிப்பதற்கும் அர்த்தஜாம பூஜைக்குமான நில தானங்கள் குறித்த தகவல்களையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் சித்தா்கள் போற்றும் செல்வனாக வீற்றிருக்கிறாா் சீயமங்கலம் ஈசன். தமிழகத்தின் முதல் சிற்பத் திருமேனியான சீயமங்கலத்து ஆடவல்லான், பக்தா்களின் வரவை எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்.

பெரும்பாலும் புகழ்பெற்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோயில் களுக்குச் சென்று வழிபடும் நாம், இதுபோன்ற பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த கலைக்கோயில்களுக்கும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வரவேண்டும்.

அங்குள்ள கலைச் சிறப்புகளை, சிற்பங்களின் அழகை, ஆலயக் கல்வெட்டுகள் விவரிக்கும் நம் சரித்திரத்தின் தொன்மையை நம் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.

அப்போதுதான், பெருமை மிக்க நம் பாரம்பர்யத்தின் மகிமையை அவர்களாலும் அறியமுடியும். நம் தமிழ் மண்ணின் மகத்தான பெருமைகளை அவா்களையும் அறியச் செய்ய வேண்டியது, நம் தலையாய கடமையாகும்.

எப்படிச் செல்வது?

திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது `தெள்ளாா்’ எனும் ஊர். இவ்வூரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது சீயமங்கலம். தெள்ளாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் தேசூர் என்ற இடம் வரும். அங்கிருந்து சீயமங்கலத்துக்கு ஆட்டோ வசதி உண்டு.

கைப்பிழைக் குற்றத்துக்குத் தண்டனை!

ரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலம் அது.

சம்புபுரத்திலிருந்த பள்ளிச் செல்வன் என்பவன், அவ்வூரில் வாழ்ந்த பள்ளி வேணாட்டரையனைக் கைப்பிழையால் கொன்று விட்டானாம்.

அந்தக் குற்றத்துக்கான தண்டனை யாக, பள்ளிச்செல்வன் இந்தத் தூணாண்டாா் கோயிலில், அரை நுந்தா விளக்கு வைக்கவேண்டும் என்று நாட்டாரும் (கிராமப் பெரியவர்கள்) சம்புவராயரும் தீர்ப்பு அளித்தார்களாம்.

அதன்படியே பள்ளிச் செல்வன் பதினாறு பசுக்களும், உருவம் பொறித்த விளக்கு ஒன்றும் தானமாக அளித்துள்ளான்!

கோவில்கள்