கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நீட்டித்த ஊரடங்கு இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது. கிராமப்புற கோவில்களை திறக்க அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
எனினும், அடுத்த மாத தொடக்கத்தில் பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கோவில் திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி பெற தேவையில்லை என்றும், தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்களின் படி கோவில்களுக்குள்ளே திருவிழா நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொற்ப அளவிலான பணியாளர்களை கொண்டு முக கவசம் மற்றும் 6அடி தனிமனித இடைவெளியுடன் திருவிழா நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை, விழாவில் உபயதாரர்கள், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், திருவிழாக்களை பக்தர்கள் வீடுகளில் இருந்து பார்க்க நேரடி ஒளிபரப்பு வசதியை செய்து தரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.