திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு, தேர் ஏறி வலம் வந்து அலங்கார - அபிஷேகம் கண்டு சபைக்கு எழுந்தருள்கிறார்.
இப்படி இன்னும்பல தகவல்களை அறிவோம்.
தேர் ஊர்ந்த செல்வன்: இந்த இருவருமே தேரில் மட்டும் வலம் வருபவர்கள். அதன் பிறகு இருவருக்கும் பெரிய அளவில் சாந்தி அபிஷேகம் நடைபெறுகிறது.
கூத்து உகந்தான்: நடராஜரின் நடனம்: ஆனந்தத் தாண்டவம். தியாகராஜரின் நடனம்: அஜபா நடனம்.
ஆறு அபிஷேகங்கள்: இந்த இருவருக்கும் ஆண்டுக்கு ஆறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ரகசியம்: தில்லைக் கூத்தரின் வலப்புறம் தனியாக ஒரு சுவரில் ஆகாச யந்திரம் அமைந்துள்ளது. இது ‘சிதம்பர ரகசியம்’ என்று போற்றப்படுகிறது. திருவாரூரில், பெருமானின் திருமேனியே ரகசியமாகப் போற்றப்படுகிறது. இது ‘சோமகுல ரகசியம்’ எனப்படுகிறது.
பூங்கோயிலும் பொற்கோயிலும்: தியாக ராஜருக்கு உரியது பூங்கோயில் என்றால், தில்லைக் கூத்தனுக்கு உரியது பொற்கோயில்.
திருச்சாலகம்: தில்லையில் 96 கண்களைக் கொண்ட வெள்ளியால் போர்த்தப் பெற்ற ஜன்னல் உள்ளது. திருவாரூரில், ‘திருச்சாலகம்’ எனும் தென்றல் தவழும் ஜன்னல் உள்ளது.
மண்ணாகி விண்ணாகி: தில்லைப் பெருமான் ஆகாய வடிவானவர். திருவாரூர்ப் பெருமான் பூமி வடிவினர். இந்த இருவருமே மண்ணாகி, விண்ணாகி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருமூலட்டானம்: தில்லையிலும் திருவாரூரிலும் மூல லிங்கத்துக்கு மூலட்டானேஸ்வரர் என்றே பெயர்.
பாத தரிசனம்: இரு இடங்களிலுமே பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இருவரும் பாத தரிசனம் கண்டுள்ளனர். தில்லையிலே பெருமானின் ‘அதிர வீசி ஆடத் தூக்கிய’ இடப் பாத தரிசனம் கண்டு மகிழ்ந்து, மார்கழித் திருவாதிரை நாளில் பேறு பெற்றனர். பின்னர் இருவரும் திருவாரூர் வந்து, இறைவனின் ‘இருந்தாடும்-கூத்து’ கண்டு பங்குனி உத்திர நாளில் வலப் பாத தரிசனம் பெற்றனர்.