மன்மதனை எரித்த குறுக்கை வீரட்டானர்!
தலத்தின் மூலவர் வீரட்டேசுவர மூர்த்தி சதுர ஆவுடையாரைக் கொண்ட லிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார்.
‘சிவனாரின் சந்ததியைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது’ என பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகாசூரன் பல கொடூரச் செயல்களை செய்துவந்தான். இதனால் கலக்கமுற்ற தேவர்கள்,ஈசனை நாடினர். அவர் தவத்தில் இருந்தார். அவரின் தவம் கலைந்தால்தானே, அசுரனை வதைக்கவல்ல சிவச் சந்ததியைப் பெற முடியும். இல்லையெனில் அசுரனின் கொட்டத்தை அடக்க முடியாதே.
ஆகவே, ஒரு காரியம் செய்யத் துணிந்தனர். சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முடிவெடுத் தனர். ஈசனின் தவத்தைக் கலைக்க, காமதேவனின் உதவியை நாடினர். காமன் தயங்கினான். தேவகுரு முதலானோர் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள். வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
ஒரு வசந்த காலத்தில், சிவனின் தவத்தைக் கலைக்கும் விதம், மலர் அம்புகளை அவர்மீது ஏவினான். அதனால் கோபமுற்ற சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை இந்த தலத்தில் எரித்தார் என்கிறது தல புராணம். `ஐங்கணையோன் உடலம் பொறி வளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்' என்றும், `கண்ணிறைந்த விழியின் அழலால் வருகாமன் உயிர் வீட்டி...' என்றும் பதிகப் பாடல்கள் காம தகனத்தைப் பாடுகின்றன!
காம தகனம் நிகழ்ந்ததால், இவ்வூர் அட்ட வீரட்டான தலங்களில் ஒன்றாகப் போற்றப் படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 26-வது தலமாகும் இது.
இந்தத் தலத்தின் சூல தீர்த்தத்தின் மகிமையை உணராத தீர்த்தபாகு முனிவர், தாம் பூஜிக்க கங்கை நீரை வேண்டினாராம். இதனால் அவரது கைகள் குறுகி கங்கை நீர் நிலத்தில் கொட்டியதாம். பிறகு தன் தவற்றை உணர்ந்த முனிவர் தன்னை தண்டித்துக் கொண்டு ஈசனின் அருளைப் பெற்றாராம். அதனால் இந்த தலம் திருக்குறுக்கை எனப் பெயர்பெற்றது.
அப்பர் பெருமான் பதிகம் பாடிப் புகழ்பெற்ற தலம் இது. இங்கு வந்து ஈசனை வணங்கினால் கூற்றுவனான யமனை வெல்லலாம் என்பது பதிகம் கூறும் செய்தி. இங்கு காமதகன மூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதைப் புராணங்கள், சம்பு விநோத சபை என்றும் காமன் அங்க நாசினி சபை என்றும் போற்றுகின்றன.
தலத்தின் மூலவர் வீரட்டேசுவர மூர்த்தி சதுர ஆவுடையாரைக் கொண்ட லிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார். உற்று நோக்கினால் மன்மதன் எய்த ஐவகை மலர்களும் இவரின் மேனியில் பதிந்திருப்பதைப் பார்க்கலாம் என்கிறார்கள்!
இறைவர் : வீரட்டேசுவரர். இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : கடுக்கா தீர்த்தம் : சூல தீர்த்தம்
காலை 7 முதல் முதல் 12 மணி வரையும் மாலை 3,30 மணி முதல் 9 மணி வரையும் கோயில் திருநடை திறந்திருக்கும். இவ்வூர் மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில், கொண்டல் என்ற ஊரிலிருந்தும் வில்லியநல்லூரிலிருந்தும் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.