இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம் அது?
தானம்’ என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது வருகிறதோ! அப்போதே நாம் பிறந்ததன் பலனை அடைந்து விட்டோம் என்பது தான் பொருள். ஒரு சிலர் எவ்வளவு தான் அவர்களுக்கு கடவுள் கொடுத்தாலும் அதில் திருப்தியே இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் எதையாவது ஈட்ட வேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகமாக அவர்களிடம் இருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு கடவுள் வாரி வழங்கினாலும் நிம்மதியை மட்டும் கண்டிப்பாக கெடுத்து விடுவார்.
நிம்மதி இல்லாத சந்தோஷம் எந்த விதத்தில் பிரயோஜனம்? என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். மற்றவர்களுக்காக ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அதில் கிடைக்கும் இன்பம் பேரின்பமாக இருக்கும். எந்த தானம் செய்தாலும் அது நல்லது தான். ஆனால் இந்த தானம் செய்தால் எல்லா தானம் செய்த பலனும் நமக்கு கிடைத்து விடுமாம். அதை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தானத்தில் சிறந்தது ‘அன்னதானம்’ என்பார்கள். அது ஏன் தெரியுமா? அன்னத்தால் தான் உயிர் சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிர் சக்தியால் தான் நமக்கு பலம் உண்டாகிறது. அந்த பலத்தால் தான் தவத்தை செய்கிறோம். தவத்தால் புத்தியையும், விஞ்ஞானத்தையும் அறிகிறோம். விஞ்ஞானத்தால் ஆத்மா சுத்தமடைகிறது. இவை எல்லாவற்றையுமே கொடுத்த பலன் அன்னதானம் செய்யும் போது நமக்கு கிடைத்து விடுகிறது என்கிறது சாஸ்திரம். அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்கள்.
பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது உங்களால் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் ஹோட்டல்களில் உங்களால் முடிந்த அளவிற்கு டோக்கன்கள் வாங்கி பசியில் தவிக்கும் ஏழைகளுக்கு கொடுத்து உண்ண செய்யலாம். அதை விடுத்து அவர்களிடம் பணமாக நீங்கள் எப்பொழுதும் கொடுக்க கூடாது. உங்களால் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் இது போல் அன்னதானம் செய்து வந்தால் உங்களை அறியாமல் உங்கள் மனம் நல்ல பாதையில் செல்லும். மனம் நல்ல பாதையில் செல்ல ஆரம்பித்தாலே வாழ்க்கையும் ஏற்றத்தை நோக்கி பயணிக்கும். புதிய புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
நாம் ஆடம்பரத்துக்காக எவ்வளவு செலவுகள் செய்து தாட்பூட் என கோலாகலமாக நம்முடைய குடும்ப விழாக்களை கொண்டாடினாலும் அந்த விழாக்களில் மீதமாகும் உணவை இயலாதவர்களுக்கு நாம் கொண்டு போய்க் கொடுக்கும் பொழுது அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறும் பொழுது நமக்கு கிடைக்கும் திருப்தி எதிலுமே கிடைக்காது என்பது தான் உண்மை. உங்கள் வீட்டு விழாக்களில் உணவு மீதமானால் தயவுசெய்து குப்பையில் வீணாக தூக்கி போடாதீர்கள்.
இரவு எத்தனை மணி ஆனாலும் உணவை வாங்கிக் கொள்வதற்கு எவ்வளவோ ஆசிரமங்கள் நமக்கு அருகிலேயே இருக்கின்றன. நல்ல உணவை அவர்களுக்கு கொண்டு போய்க் கொடுங்கள். அது தான் உங்களுக்கு உண்மையான புண்ணியத்தை சேர்க்கும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.